சில்லறை தட்டுப்பட்டால் அத்தியாவசியத் தேவையான பால், காய்கறிகள் போன்றவற்றை வாங்க முடியாத நிலை. விவசாயிகளால் விளைந்த காய்கறிகளை விற்க முடியவில்லை. வியாபாரிகளால் கொள்முதல் செய்து விற்பனை செய்ய இயலவில்லை. இப்படி ஒவ்வொரு பக்கமும் பிரச்னை. அதனால் நாடு முழுவதும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இந்தச் சமயத்தில் சற்று வித்தியாசமாகச் சிந்தித்து பணப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது தெலுங்கானாவைச் சேர்ந்த உழவர் சந்தை ஒன்று என தி நியூஸ் மினிட் இதழில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதற்காக அந்த உழவர் சந்தை ஐடிஎஃப்சி வங்கியுடன் கைகோர்த்தது. காய்கறி வாங்க வருபவர்களுக்கு பணத்திற்கு பதிலாக கூப்பன் வழங்கப்பட்டது. உழவர் சந்தைக்குள் என்ட்ரி ஆகும் போதே ஆதார் கார்டினைக் காட்டி மக்கள் கூப்பனைப் பெற்றுக் கொள்ளலாம். கூப்பனை கொடுத்து, வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். காய்கறிகளை வாங்கி முடித்த பிறகு கூப்பன்களைத் திருப்பிக் கொடுத்தால், மீதி பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நாள் முடிவில் வியாபாரிகள் தங்களிடம் உள்ள கூப்பன்களை கவுன்டரில் வழங்கினால், அதற்குண்டான பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இல்லையெனில் அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. புதிய நடைமுறையால் வியாபாரம் பாதிக்கப்படவில்லை. உழவர் சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.
இந்த உழவர் சந்தை வியாபாரியான முகமது கூறுகையில், "ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட ரூ.30,000 வரை சம்பாதிப்பேன். இதில் கொள்முதல் செலவு, வாகன வாடகை, கடையில் வேலை பார்ப்பவர்கள் சம்பளம் எல்லாம் போக சொற்பத் தொகைதான் லாபமாக நிற்கும். நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக சட்டென்று குறைந்து போனது. கடந்த வாரத்தில் ரூ.10 ஆயிரத்துக்குக் கூட காய்கறிகள் விற்பனையாகவில்லை. இறுதியில் கூப்பன் அறிமுகத்தால் தப்பித்தோம்'' என்கிறார்.
இது முகமதுவுக்கு மட்டுமானது அல்ல. பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒவ்வொரு இந்தியரும் சந்திக்கும் பிரச்சினைதான். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு இதுவரை வங்கிக் கணக்கு வைத்திருக்காதவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் எல்லாரையும் வங்கி என்ற வட்டத்துக்குள் கொண்டு வருவதுதான் அரசின் இலக்கு.
வங்கி மூலம் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கு நடக்க வேண்டுமென்பதுதான் இதன் பின்னணி. இல்லையென்றால் கள்ள நோட்டினை மட்டும்தான் ஒழிக்க முடியுமே தவிர கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. புதிய நோட்டிலும் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியாது. இதற்கு ஒரே வழி பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதுதான். அதனை நோக்கித்தான் அரசும் சென்று கொண்டிருக்கிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைப் போல், ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணமாக எந்த ஒரு பொருளையும் வாங்கக்கூடாது என்ற அறிவிப்பும் எந்நேரமும் வரலாம். அப்போது ஆதார் கார்டும், பான் கார்டும் கட்டாயமாக்கப்படலாம். இப்போது தெலுங்கானா மாநிலத்தில் தற்காலிகமாக நடைபெறும் நிகழ்வு, நாளை நமது உள்ளூர் சந்தைகளிலும் நிரந்தரமாக நடக்கலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.