Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 6, 2016

மகனை சரணடைய வைத்த தாய்....தீவிரவாதத்தை வென்றது தாய்பாசம்!


காஷ்மீரில் சாபோர் பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டை சுற்றி வைளத்தனர். பதுங்கியிருந்த தீவிரவாதி லஸ்கர் இ தொய்பாவை சேர்ந்த உமர் காலித் என்ற அமிர். 26 வயது இளைஞர். இவர் துஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காலித் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தாலும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தாக்குதல் நடத்தி விடவில்லை.

பதுங்கியிருந்தவரை சுட்டுக் கொன்று விட விரும்பாத பாதுகாப்பு படையினர் அவர்களை உயிருடன் பிடிக்க கருதினர். இதனால், அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த துஜார் கிராமத்தில்  இருந்த அமீரின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். 'நீங்கள் வந்து உங்கள் மகனை சரண்டர் அடையுமாறு அறிவுரைக் கூறுங்கள்' என காலீத்தின்  பெற்றோரிடம் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர்.

காலீத்தின்  பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 'காலீத் சரண் அடையும்பட்சத்தில் நிச்சயம் கனிவுடன் நடத்தப்படுவார்' என்றும் பாதுகாப்பு படையினர் அவரது தாயிடம் உத்திரவாதம் அளித்தனர். காலீத்தின்  தாய் நேற்று  வீட்டுக்குள் அனுப்பப்பட்டார். உள்ளே சென்ற அவர் தனது மகனிடம் சரண் அடைந்து விடுமாறு மன்றாடினார். அமீர் மசியவில்லை. ஒருகட்டத்தின் கண்ணீருடன் தாய் மன்றாடியதை அடுத்து சரண் அடைய அமீர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த காலீத், தான் கையில் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கி, 3 மேகசின் 3 கிரெனைட் குச்சிகள் மற்றும் ரேடியே செட் ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தார்.

கடந்த மே மாதத்தில் இருந்து அமீர் காணாமல் போய் விட்டார். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. லஸ்கர் இ தொய்பாவில் அமீர் சேர்ந்தது இப்போதுதான் அவரது பெற்றோருக்கே தெரிய வந்துள்ளது. சரண் அடைந்த அமீரை போலீசாரிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

அண்மையில் காஷ்மீர் முதல்வர் முக்தி மெகபூபா,  '' தீவிரவாதக் குழுக்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களை சுட்டுக் கொனறு விடாமல் அவர்கள் மனதை மாற்றி சரண் அடை செய்யுங்கள். துப்பாக்கி எடுக்கும் கைகளில் சாத்தியமிருந்தால் பேட்டையும் பந்தையும் கொடுங்கள். நல்ல கல்வி கொடுத்து சாதாரண வாழ்க்கைக்கு திருப்ப முடியுமா என்பது குறித்து ஆலோசியுங்கள்.  தேவையில்லாமல் இளைஞர்களின் உயிர்களை பறிக்க வேண்டாம்'' என தனது பாதுகாப்புப் படையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில்தான் காலீத்தின் பெற்றோரை பேச வைத்து, அவரை சரண் அடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் வெற்றி கண்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''  தீவிரவாதிகளை கண்டவுடன்  சுட்டுக் கொல்ல வேண்டுமென்பது எங்கள் நோக்கம் அல்ல. அமீரின் வீட்டில் அவரது தாய் மட்டும்தான் இருந்தார். தந்தை காலித் மிர் வெளியே சென்றிருந்தார். அவரையும் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வந்தோம். வீடு இருந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கவில்லை. சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் 2 மணி நேரம் அமீரிடம் தாயும் தந்தையும் பேசி சரண் அடைய வைத்தனர். இதனால் ஒரு இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.