Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

சீன ராணுவத்திற்கு ‘தண்ணிகாட்டிய’ இந்திய குதிரை


ராணுவம், போலீசில் வீரதீரத்தோடு செயல்படுவோருக்கு பட்டம், பதக்கம் வழங்கப்படுவது எல்லோருக்கும் தெரியும். மனிதர்களுக்கு வழங்கப்படுவது போலவே, இத்துறைகளில் சேவையாற்றும் குதிரைகளுக்கும், நாய்களுக்கும் பதக்கங்களும், விருதுகளும் வழங்கப்படுகின்றன.

சமீபத்தில் அப்படி, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு குதிரையும், நாயும் கவுரவிக்கப்பட்டன.

‘தண்டர்ஸ்டார்ம்’ என்ற 7 வயதான குதிரைக்கு, போக்குவரத்துத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்கான பதக்கம் அணிவிக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் மைனஸ் 50 டிகிரி குளிரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான உயிர்நாடியாக தண்டர்ஸ்டார்ம் விளங்குகிறது. வாகனங்களால் அடைய முடியாத அந்தப் பகுதியில், தண்டர்ஸ்டார்ம் தலைமையிலான மட்டக்குதிரைகள், கோவேறு கழுதைகள், யாக் எருதுகள் அணிதான் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதல், உணவுப் பொருட்கள், தண்ணீர் வரை எடுத்துச் செல்கின்றன. தண்டர்ஸ்டார்ம் குதிரை மட்டும் இந்த ஓராண்டில் 7 பதக்கங்களை வென்றிருக்கிறது.

மூன்று வயதாகும் நாய் சோபியாவுக்கு, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை ‘கே9’ பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உயர்ந்த பதக்கத்தை வேறு எந்த பிராணிகளும் இதுவரை பெற்றதில்லை. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் எல்லா பாதுகாப்புப் படை சார்ந்த நாய்களையும் விட சிறப்பாகச் செயல்பட்டதற்கான அங்கீகாரம் இது. இந்தப் பதக்கத்துக்கான தேர்வுக் குழுவில், இந்திய- திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, ராணுவம், விமானப் படை, கப்பல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், மற்ற மோப்ப நாய்களை விட அதிகமாக வெடிகுண்டுகளை சோபியா கண்டுபிடித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையின்போதான பாதுகாப்புச் சோதனைகளிலும் சோபியா அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில், முதல்முறையாக ‘ஹவில்தார்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியது, ‘பவன்’ என்ற மட்டக்குதிரை. 1968-ல் ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் பணிபுரிந்த பவன், ஒருமுறை சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுவிட்டது. அதை தங்கள் பகுதியில் பொருட்களை ஏற்றிசெல்லப் பயன்படுத்த சீன ராணுவ வீரர்கள் முயன்றனர். ஆனால் அந்தப் பொருட்களுடன், 40 கி.மீ. தூரம் ஓடிவந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது, பவன். அக்குதிரையின் அசாதாரண தைரியம், விசுவாசத்துக்காக அதற்கு ‘ஹவில்தார்’ பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

சரி, இதுபோல பதக்கம் பெறும் குதிரை, நாய்களுக்கு என்ன நன்மை?

அவற்றுக்கு, பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, பதக்கம் பெறும் குதிரைகளுக்கு வாழ்நாள் முழுவதும் சாக்லேட்டுகளும், நாய்களுக்கு எலும்புகளும் கூடுதல் சலுகைகளாக வழங்கப்படுகின்றன. அவற்றுக்கும், அவற்றின் பயிற்சியாளர்களுக்கும் கூடுதல் ஓய்வுநேரச் சலுகைகள் கிடைக்கின்றன. சிறப்பாகச் செயல்படும் நாய், குதிரைகளின் பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கப்படுகின்றன.

பாதுகாப்புப் படைகளில் நாய்கள், வெடிகுண்டுகளை மோப்பம் பிடிப்பதற்கு மட்டுமின்றி, ரோந்து, தாக்குதல், பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்தல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவத்தில் அசாதாரண சாதனை புரியும் நாய்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி அல்லது ராணுவ உயர் அதிகாரிகள் ‘கவுரவ கார்டுகளை’ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.

ராணுவத்தினரோடு சேர்ந்து தேசத்துக்காக உழைக்கும் இந்த பிராணிகளுக்கும் ஒரு ‘சல்யூட்’ அடிப்போம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.