Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை : வங்கிகளில் குவிந்த கூட்டத்தில் 2 பேர் பலி




புதிய நோட்டுகளை பெறுவதற்காக ஏ.டி.எம்களில் குவிந்த மக்கள் பெரும்  ஏமாற்றம் அடைந்தனர். அந்த எந்திரங்களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் வங்கிகளுக்கு மீண்டும் படையெடுத்தனர். இந்த கூட்ட நெரிசலில் ஒருவர் மும்பையிலும், ஒருவர் கேரளாவிலும் பரிதாபமாக இறந்தனர்.  நாட்டில் வரி ஏய்ப்பு, கள்ள நோட்டு  புழக்கம், கறுப்பு பணம்  இவற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக கடந்த 8-ம் தேதியன்று  பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து இரு நாட்களுக்கு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன. மேலும் வங்கிகள் ஒரு நாள் இயங்கவில்லை.

பழைய  ரூ.500 மற்றும்  ரூ.1000  நோட்டுகளை ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து முற்றிலும் அகற்றுவதற்காக இந்த விடுமுறை விடப்பட்டது. இந்த இடைப்பட்ட ஒன்றிரண்டு நாட்களில் மக்கள் தங்கள் அன்றாட அத்தியாவசிய செலவுக்கு கூட பணம் இல்லாமல் பரிதவித்தார்கள். இந்நிலையில், முடங்கி கிடந்த ஏ.டி.எம். சேவை நேற்று மீண்டும் துவங்கியது. இதையடுத்து மக்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு விரைவாக சென்று பணத்தை எடுக்க தொடங்கினார்கள். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக ஏ.டி.எம். சேவை துவங்கிய சில மணி நேரத்திலேயே ஏ.டி.எம். மையங்களில் பணம் தீர்ந்து போனது. இதனால், மக்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர். பலர் மத்திய அரசை வசைபாடி சென்றனர். ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் மீண்டும் வங்கிகளுக்கே படையெடுத்தனர். இதனால், 2-வது நாளாக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணத்தை பெற்றுச் சென்றனர்.

சில முதியவர்களுக்கு இளைஞர்கள் உதவினார்கள். அவர்கள் தியேட்டர்களில் முண்டியடித்து நிற்பதைப்போல நின்றார்கள். இதனால் வயதானவர்களுக்கு திணறல் ஏற்பட்டது. நிதி தலைநகரமான மும்பையில்  ஒரு வங்கி கிளைமுன்பாக  குவிந்திருந்த கூட்டத்தில் சிக்கிய 73 வயது பெரியவர் மூச்சு திணறி இறந்தார். இறந்த நபரின் பெயர்  விஸ்வந்த் வர்தாக் என்பதாகும். அவர் முலுந்த் என்ற இடத்தில் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நின்ற போது  மயங்கி விழுந்து இறந்தார்.கேரளாவின்,பினராயி பகுதியை சேர்ந்த 48 வயது  உன்னி, மின்வாரிய ஊழியர் ஆவார். இவர் தன்னிடமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் அடங்கிய சுமார் ரூ.5.5 லட்சத்தை மாற்றுவதற்கு, திருவாங்கூர் நகரிலுள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கிக்கு சென்றார் அவர் . கூட்ட நெரிசலில் சிக்கி 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏ.டி.எம்களில் போதிய பணம் இல்லை என்ற குற்றச்சாட்டுகளை மக்கள் எழுப்பினர். இது குறித்து நாட்டில் உள்ள 40 ஆயிரம் ஏ.டி.எம்களை இயக்கும்  டிரான்ஸ்சாக்‌ஷன் பிராசசிங்கின் தலைவர் பால சுப்பிரமணியன் கூறுகையில், நேற்று முன்தினமே (நவ.10) நாட்டில் உள்ள ஏ.டிஎம்களுக்கு தேவையான 50 சதவீத தொகையை போட்டு விட்டோம். தற்போது ஏ.டி.எம்களில் ரூ.100 நோட்டுகளே அதிக அளவில் கிடைக்கும். இன்னும் ஆறு நாட்களில்  ஏ.டி.எம்களில் இருந்து மக்கள் முழுவதுமாக பணம் எடுக்க முடியும். ஒரு வாரம் கழித்தே ஏ.டி.எம்களில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு கிடைக்கும் என்றார்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளே தரப்படுகின்றன. ரூ.500 நோட்டுகள் தரப்படவில்லை. இது குறித்து கர்நாடகத்தில் ஒரு பெண் கூறுகையில்., சாதாரண நபர்களை சித்ரவதை செய்யும் நடவடிக்கையாக அரசின் நடவடிக்கை உள்ளது. நாங்கள் நேரத்தை வீணடித்து காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.

கர்நாடக மாநிலம் பிடாரில் நேற்று மதியம் வரை ஏ.டி.எம்கள் திறக்கப்படவில்லை. மதியத்திற்கு பின்னரே கர்நாடக வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன. வங்கிகள் முன்பாக மக்கள் பெரும் வெள்ளமென திரண்டு இருந்தார்கள். கொல்கத்தாவில் ஏ.டி.எம்களில் சில மணி நேரத்தில் அனைத்து பணமும் எடுக்கப்பட்டு காலியானது. அதிக அளவிலான மக்கள் ஏ.டி.எம்களில் பணம் இன்றி வங்கி கிளைகளை நோக்கி பதறியபடி ஓடினார்கள். வங்கிகளில் போதிய அளவில் பணம் உள்ளது. மக்கள் பதட்டம் அடையத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தமிழகத்திலும் மக்கள் வங்கி கிளைகள் முன்பாக குவிந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் பெரும் கவலை படிந்திருந்தது. மதுரை, சென்னை போன்ற பெரு நகரங்களில் வங்கி கிளைகளில் மக்கள் காலை 6 மணி முதலே குவிந்திருந்தார்கள். மதுரையில்  சில ஏ.டி.எம்களில் மதியத்திற்குள் பணம் காலியானது. இதர மக்கள் பணம் பெற மீண்டும் வங்கி கிளைகளுக்கு ஒடினார்கள். பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தனியார் மருத்துவமனைகளில் வருகிற 30-ம் தேதி வரை செல்லும் என அறிவிக்க வேண்டும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாட்டில் உள்ள தனியார் வங்கிகளிலும் பணம் விநியோகிப்பதில் பெரும் சிரமம் காணப்பட்டது. கோயம்புத்தூரில் சில ஏ.டி.எம்களில் இதர வங்கிகளின் கார்டுகளுக்கு பணம் வரவில்லை. சில ஏ.டி.எம்களில் வாடிக்கையாளர்கள் பணம் கேட்டு பட்டனை அழுத்திய போதும் பணம் இல்லை என்ற பதிலே வந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் மக்கள் பணம் எடுக்க அலை மோதினார்கள். விவரம் புரியாத மக்கள் பணத்தை எப்படி எடுப்பது என தெரியாமல் கண்ணீருடன் நின்றது வேதனையாக இருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.