Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

பேத்தி பெற்ற மருமகளுக்கு மாமியாரின் ஆச்சர்ய பரிசு!


திருமணமாகிப் போகும் புது பெண்களுக்கு மாமியாரை எதிர்கொள்வதுதான் சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். கணவரை விட மாமியார் எப்படி நடந்துக் கொள்வாரோ என்ற கவலைதான் அவர்களிடம் தலைதூக்கி நிற்கும். திருமணமான 'ஒரே வருடத்தில் பேரனை பெற்று தந்து விடு' என்பதுதான் மாமியார்கள் மருமகள்களுக்கு போடும் முதல் கட்டளையாகவும் இருக்கும். குழந்தை பிறப்பு தள்ளிப் போனால் வார்த்தைகளால் குத்திக் காட்டவும் ஆரம்பித்து விடுவர். ஒரு வேளை பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை சில நாட்கள் பார்க்கக் கூட வராத மாமியர்களைப் பற்றிக் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். தொடர்ச்சியாக 3 பெண் குழந்தைகளை பெற்றுவிட்டால், அந்த பெண் படும் பாட்டினை சொல்லி மாள முடியாது.'மூன்றையும் பெண்ணா பெத்து வச்சுருக்கா...எப்படிதான் கரை சேர்க்கப் போறானு தெரியலையே 'என மாமியார்கள் புலம்ப ஆரம்பித்து விடுவார். வழக்கமான இந்திய மாமியார்களின் கதை இது.

இவர்கள் மத்தியில் உத்தரப்பிரதேச மாமியார் ஒருவர் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹரிபூர் மாவட்ட சுகாதாரத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பிரேமாதேவி. பெண்களைப் பற்றிய இவரது பார்வையே வேறு. மருமகள்களிடம் 'எனக்கு பேரனை பெற்றுக் கொடு ' என  கூறும் மாமியார்களுக்கு மத்தியில் பேத்திதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் ரகம்.

இவரது மருமகள் குஷ்பூ கர்ப்பமடைந்தார். பேத்தி பெற்றுக் கொடுத்தால் மருமகளுக்கு மறக்க முடியாத பரிசு அளிப்பதாக பிரேமா தேவி வாக்கு அளித்திருந்தார். பிரேமாதேவியின் ஆசைப்படியே குஷ்பூ பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்தார். தான் நினைத்தபடியே மருமகள் பேத்தியை பெற்றுக் கொடுத்ததால், பிரேமாதேவி ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார். தீபாவளி தினத்தில் தனக்கு பேத்தியை பெற்றுக் கொடுத்த மருமகளுக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு அளிக்கப் போவதாக கூறினார்.


அத்துடன் பேத்தி பிறந்ததை பெரிய விழாவாகவும் கொண்டாடினார். அன்றைய தினத்தில் மருமகளுக்கு புத்தம் புதிய ஹோண்டா சிட்டி காரை வாங்கி பரிசளித்தார் பிரேமாதேவி. மாமியாரிடம் இருந்து கண்களில் நீர் வழிய கார் சாவியைப் பெற்றுக் கொண்டார் குஷ்பூ. ''இப்படி  மாமியாரை அடைந்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை ' என்கிறார் கண்ணீர் மல்க.

''ஒவ்வொரு மாமியார்களும் மருமகள்களை மகளைப் போலவே நடத்த வேண்டும். அப்போதுதான் பெண் சிசுக் கொலை முடிவுக்கு வரும். மகள்களைப் போல மருமகள்கள் நடத்தப்படும் பட்சத்தில் வீட்டுக்குள் மகிழ்ச்சி நிலவும்'' என்கிறார் பிரேமாதேவி.

உயர்ந்த காரை வாங்கி பரிசளித்தது பெரிய விஷயம் அல்ல. பேரன்... பேரன் என்று அலையும் மாமியார்களுக்கு பிரேமாதேவி கூறிய சேதிதான் இங்கே முக்கியம். அந்த வகையில், பிரேமாதேவி மாமியர்களுக்குள் ஒரு மாணிக்கம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.