Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

சாமானியர்களுக்கானதா சிறப்பு ரயில்கள்...? சங்கடப்படுத்தும் கட்டணம்!


சென்னையின் தனித்துப் போன வாழ்க்கையில் இருந்து விடுபட்டு பண்டிகை நாளுக்காக உறவினர்கள், நண்பர்களோடு கொண்டாட்டங்களில் ஈடுபட சொந்த ஊர்களுக்குப் பயணிப்பவர்கள் ஏராளம். இவர்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே பண்டிகைகாலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் வழக்கமான கட்டணத்துடன் கூடிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதை ரயில்வே நிறுத்திக் கொண்டது.

சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல விரும்புவோர், வழக்கமான ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே அனைத்து ரயில்களிலும், அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்பட்டு விடுகின்றன. பண்டிகைக்கொண்டாட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுவர்கள் பெரும்பாலோனோர் முன்பதிவில் முந்தி விடுகின்றனர்.
விடுமுறை கிடைப்பது, போனஸ் கிடைப்பது போன்ற காரணங்களால்  பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்புதான் பெரும்பாலானோர் திடீர் பயணங்களை மேற்கொள்கின்றனர். இத்தகைய பயணிகளைக் குறிவைத்துத்தான் ஆம்னி பேருந்துகள் செயல்படுகின்றன.  ஆனால், இப்போது தெற்கு ரயில்வேயும் இது போலக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கி விட்டது.
பண்டிகை காலங்களுக்காக சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள், சுவிதா சிறப்பு ரயில்கள் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் மட்டும்தான் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் ஒரு பெட்டியில் இருக்கும் 100 இடங்களும், தலா 20 வீதம் 5 பிரிவாகப் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. முதல் 20 இடங்களுக்கு ஒரு கட்டணம், அடுத்த 20  இடங்களுக்கு இன்னும் அதிக கட்டணம். 80 முதல் 100 வரை உள்ள இடங்களுக்கு மிக, மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவிதா  ரயில் அதிக நிலையங்களில் நிற்காது. சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  
இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க கன்பர்ம் டிக்கெட் மட்டும்தான் பெறமுடியும். இதில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எதுவும் இல்லை. இந்த ரயில்களில் சாமானியர்கள் பயணிக்க முடியாது. எந்தவித முன்பதிவும் செய்யாமல் ஊருக்குக் கிளம்புபவர்கள் சாதாரண மக்கள்தான்.
வடமாநிலங்களில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் விடுகின்றனர். இதில் உள்ள பெட்டிகள் எல்லாம் முன்பதிவு செய்யப்படாதவை. இது போன்ற ரயில்களை ஏன் தமிழகத்தில் விடுவதில்லை என்று தெரியவில்லை.



மொத்தமாக புக் செய்யும் முகவர்கள்

விழாக்காலங்களில் இருக்கும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு முகவர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். டிக்கெட் புக்கிங் செய்யும் அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு சில முகவர்கள்  டிக்கெட்களை மொத்தமாக புக் செய்து விடுகிறார்கள்.
சில புக்கிங் கவுன்டர்களில், மதிய உணவு இடைவேளை என்று சொல்லி, கவுன்டர் முன்பு  CLOSED என்ற போர்டு வைத்துவிடுவார்கள். ஆனால், அந்த கவுண்டரில் இருக்கும் நபர்  கம்ப்யூட்டரில் மும்முரமாக டிக்கெட் புக்கிங் செய்து கொண்டிருப்பார். முகவர்களுக்கு இப்படித்தான் மொத்தமாக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்கிறார்கள்.


மாணவர்களை கொண்டு புக்கிங்  

அதிகாரிகள் கைவசம் இல்லாத  அல்லது அதிகாரிகளைத் தெரியாத சில முகவர்கள், கல்லூரி மாணவர்களிடம் தனித்தனியாக ஃபார்ம்களைக் கொடுத்து அனுப்பி மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்து விடுகிறார்கள்.  இதுபோன்று அதிக அளவில் நடக்கிறது.
ஷீரடிக்கு  வாரம் தோறும் புதன் கிழமையன்று சென்ட்ரலில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு எப்போதுமே டிமான்ட் இருக்கிறது. இந்த ரயிலுக்காக சாமானியர்கள் யாரும் புக்கிங் செய்து விடமுடியாது. எப்போதுமே 4 மாதங்களுக்கு முன்பே பதிவாகி விடும். அதன்பிறகும் கூட ஏஜென்ட்கள் மட்டும் இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து விடுவார்கள்.


டிமாண்டை பயன்படுத்திக் கொள்ளை

தட்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் உதவித் தலைவர் இளங்கோவனிடம் பேசினோம்.
"சுவிதா ரயில், சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களில் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதில் மூன்று மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர். விழாக்காலங்களில் பயணிகள் அதிக அளவுக்கு வெளியூர் செல்லும்போது டிமாண்ட் ஏற்படுகிறது. அதிகம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். வழக்கமாக விழாக்காலங்களில் டிமாண்டைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்காரர்கள்தான் கொள்ளையடிப்பார்கள். தென்னக ரயில்வே இப்படிச் செய்வது நல்லதல்ல.


தனியார் மயத்துக்கு முன்னோட்டமா?

ரயில் போக்குவரத்தில் விரைவில்  தனியார்களை அனுமதிக்கப் போகிறார்கள். அரசு,  தனியார் இரண்டு தரப்பிலும் ரயில்கள் இயக்கப்படும். ரயில் வளர்ச்சி ஆணையம்தான் கட்டணங்களைத் தீர்மானிக்கப்போகிறது. செலவு, லாபம் இரண்டையும் கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்போகிறார்கள்.
அரசு ரயிலிலேயே கட்டணம் அதிகமாக இருக்கும்போது, தனியார் ரயில்களில் கட்டணம் அதிகம் இருப்பதற்கு  யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் இப்போது சிறப்பு ரயில்கள் என்ற பெயர்களில் கட்டணக் கொள்ளை நடக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.