Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட் கற்றுத் தந்த நண்பர் இவர்தான்!


கிரிக்கெட் உலகில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ரொம்பவே பாப்புலர். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு முறையாவது அந்த ஷாட்டை அடிக்க தோனி முயற்சிப்பார். அதற்கு வசதியாக பந்து கிடைத்தால், சர்வசாதாரணமாக பந்து ஸ்டேடியத்தின் கூரையை நோக்கி பயணிக்கும். ஆனால், இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி கண்டுபிடித்தது கிடையாது. அவரது நண்பர் சந்தோஷ் லால்தான் தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்துள்ளார். துரதிருஷ்டவமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த சந்தோஷ்லால் இறந்து விட்டார்.

தனது 'அன்டோல்ட் ஸ்டோரி ' புத்தகத்திலும் சந்தோஷ்லால் பற்றி தோனி மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.'' சந்தோஷ் லால் எனது பால்ய கால சினேகிதன். ஜார்ஹன்ட் மாநில ரஞ்சி அணியில் என்னுடன் சந்தோஷ் லாலும் இடம் பெற்றிருந்தார். இந்த சந்தோஷ் லாலிடம் இருந்துதான் நான் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க கற்றுக் கொண்டேன். சந்தோஷ் லால், அதனை' தாப்பாட் ஷாட் 'என்பார். அவருக்கு சமோசா வாங்கிக் கொடுத்து அந்த ஷாட்டை அடிக்க நான் கற்றுக் கொண்டேன்'' என தோனி கூறியுள்ளார். இது தோனி:அண்டோல்ட் ஸ்டோரி படத்திலும் வருகிறது.

ஒரு கட்டத்தில் இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்த தோனி கேப்டனாக உயர்ந்த பின்னரும் தனது பழைய நட்பை மறக்கவில்லை. ராஞ்சியில் இருந்தால் எப்போதும் சந்தோஷ்லாலுடன்தான் தோனி இருப்பார். இருவரும் அடிக்கடி ராஞ்சியில் பைக்கில் சேர்ந்து போவதும் வழக்கம்.

கடந்த 2013-ம் ஆண்டு இந்திய அணியுடன் தோனி வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது கணைய நோய் காரணமாக சந்தோஷ்லால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த தோனிக்கு சந்தோஷ்லாலின் உடல்நிலை குறித்து, உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. பரிதவித்துப்போன தோனி, 'என்ன செலவானாலும் பரவாயில்லை. உடனடியாக அவரை டெல்லிக்கு கொண்டு செல்லுங்கள் 'என கூறினார்.

இதையடுத்து, தனி ஹெலிகாப்டரில் சந்தோஷ்லாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், சந்தோஷ்லாலின் துரதிருஷ்டம் மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டரால் நேரடியாக டெல்லி செல்ல முடியவில்லை. வாரணாசியில் ஒரு முறை தரை இறங்க வேண்டியதாகி விட்டது.  பின்னர் மீண்டும் டெல்லி போக, தாமதமாகி விட்டதால், சந்தோஷ்லாலின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. சந்தோஷ்லால் இறக்கும்போது அவருக்கு வயது 32தான். சந்தோஷ்லாலுக்கு மனைவியும் 3 வயது மகளும் உண்டு.  நண்பர் மறைந்துவிட்ட நிலையில், இப்போதும் அந்தக் குடும்பத்துக்கு தோனி உதவி வருகிறார்.

தோனி - சந்தோஷ்லால் நட்பு குறித்து நிஷாந் தயால் என்ற மற்றொரு நண்பர் தெரிவிக்கையில், '' இருவரும் டென்னிஸ் பால் விளையாடும் காலத்தில் இருந்தே நண்பர்கள். சிறுவயது முதலே ஜார்ஹன்ட் மாநிலம் முழுவதும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட இணைந்தே போவார்கள். இருவரும் ரயில்வேயில் ஒன்றாக பணியாற்றினார்கள். சந்தோஷ்லால் பயமற்ற ஒரு அதிரடி பேட்ஸ்மேன். பந்து எப்படி வீசப்பட்டாலும் சற்றும் பயமில்லாமல் எதிர் கொள்வார். சந்தோஷ்லாலின் பேட்டிங் திறமையைக் கண்டு தோனியே வியந்து போவார். சந்தோஷ்லால்தான், தோனி ' ஹெலிகாப்டர் ஷாட்' அடிக்கும் வித்தையைக்  கற்றுக் கொடுத்தார். நாளைடைவில் தோனி அதில் கில்லியாக மாறி விட்டார் '' என அப்போது குறிபிட்டிருந்தார்.

இதுநாள் வரை, தோனிதான் ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்தவர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது,  தனது சுயசரிதைப் புத்தகத்தில்  ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்த பால்ய நண்பரை குறிப்பிட்டு அவரை கவுரப்படுத்தியுள்ளார் தோனி. உண்மையிலேயே தோனியின் சுயசரிதை ஒரு 'அன்டோல்ட் ஸ்டோரி' தான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.