Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

இனி ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினாலும் கைது... மிரட்டும் வழக்குகள்!


கோவை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அடுத்தடுத்து சிலர் கைதாகி வரும் நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து பேசியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவதூறு பரப்பினால் கைது  செய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் சமூக வலை தளங்களில் முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக மதுரை, நாமக்கல்லைச் சேர்ந்த இருவரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து பேசியதாக இருவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் புனிதாதேவி. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்றார். அப்போது தொண்டாமுத்தூர் 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தனக்கு அறிந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது முதல்வரின் உடல்நிலை குறித்து பேச்சு கிளம்பியது. வங்கியில் பணியாற்றும் ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவர் முதல்வர் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல்களை தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து புனிதா தேவி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பாக புனிதா தேவி தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக வங்கி ஊழியர்களிடம் பேசினோம். "வங்கியில் இருந்தபோது, முதல்வர் உடல்நிலை குறித்த மெசேஜ் வந்தது. அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம். யாரும் வதந்தியை பரப்பவில்லை. இதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன," என்றனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூரில் அமைச்சர் உத்தரவின் பேரிலேயே இந்த வழக்கு பதியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இனி பேசினாலே கைது செய்யப்படும் என்ற ரீதியில் தொடர்ந்துள்ள போலீசாரின் நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.