Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

''விளையாடக் கூட சேர்க்க மாட்டார்கள்!'' சச்சினை நெகிழ வைத்த மாரியப்பன்


பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட பாராலிம்பிக் வீரர்களை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

ரியோவில் அண்மையில் முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பதக்கம் வென்ற நான்கு வீரர்கள் மற்றும் இதற்கு முன்னர் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை சச்சின் வழங்கினார்.

விழாவில் பங்கேற்ற சச்சின் பாராலிம்பிக் வீரர்களை வெகுவாக பாராட்டினார். அவர் பேசுகையில், '' எனது வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி ஸ்பெஷலான தருணம். இந்த விழாவுக்கு அழைத்து என்னை கவுரவப்படுத்தியதற்கு நன்றி. இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த நான்கு வீரர்கள் குறித்தும் நானும் பெருமிதம் கொள்கிறேன். உலகம் இவர்களை மாற்றுத்திளாளிகள் என்று அழைக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன்கள் அசாதாரணமானவர்கள்.  ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஏராளமான சோதனைகள் துயரங்கள் இருக்கும். ஆனால், இவர்கள் சந்தித்தது போல பிற விளையாட்டு வீரர்கள் சந்தித்திருக்க முடியாது.  தடைகளைத்தாண்டி சாதித்திருக்கும் இவர்களைப் உதாரணமாகக் கொண்டு இன்னும் பல வீரர்கள் உருவாகி வர வேண்டும் '' என பேசினார்.



விழாவில் குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்,  ''பாராலிம்பிக் வீரர்கள் என்று அழைக்கப்படும் போது நான் வருத்தமடைகிறேன். இந்த போட்டியின் பெயர் 'ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக்ஸ் என்று மாற்றப்பட வேண்டும் '' என கோரிக்கை விடுத்தார்.

ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், ''எனக்கு சச்சின்தான் ரோல் மாடல். இப்போது என்னால் அவரை நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி '' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வீரர் மாரியப்பன் பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது. மாரியப்பன் பேசுகையில், ''எதையாவது சாதிக்க வேண்டும். எனது அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற வெறி எனக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது. நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்கள் என்னை விளையாடக் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்போதுதான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, உயரம் தாண்ட ஆரம்பித்தேன் .பின்னர் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் வெற்றி கிடைத்தது. ரியோவில் பதக்கம் வென்ற பிறகு,அங்கு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைப் பார்த்து எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமிதம் எனக்குள் ஏற்பட்டது'' என்றார்.

மாரியப்பனின் பேச்சு சச்சின் உள்ளிட்ட கூட்டத்தினரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நிகழ்ச்சி முடிவில் பாராலிம்பிக் சாம்பியன்களுடன் சச்சின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.