Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

‛பி.சி.சி.ஐ. அதிகாரிகளை நிர்வாணமாகக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்!’ - முன்னாள் நீதிபதி விளாசல்


‛பிசிசிஐ அதிகாரிகளை கம்பத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து உதைக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டரில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வருவதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையை மீறி, பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கியதாக தெரிகிறது. இது நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக இருப்பதாக தெரிவித்து,  யெஸ் பேங்க் மற்றும்  பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா  ஆகிய இரு வங்கிகளையும் பிசிசிஐயின் வங்கிப் பரிவர்த்தனைகளை முடக்க, லோதா கமிட்டி உத்தரவிட்டது.


இந்தத் தகவல்  அறிந்ததும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் ‛‛நிதி இல்லாமல் நாங்கள் எப்படி போட்டிகளை நடத்த முடியும்? நியூஸிலாந்து தொடரை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்றார். இதற்கிடையே, ‛நாங்கள் பிசிசிஐ வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. பிசிசிஐ வழக்கம் போல தங்கள் பணியைத் தொடரலாம்’  என லோதா கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுஒருபுறம் இருக்க, லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக பிசிசிஐ சார்பில் நியமிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தற்போது பிசிசிஐக்கு எதிராக திரும்பியுள்ளார்.  கட்ஜு பரிந்துரைத்த அறிக்கையை பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே நிராகரித்தது கூட இந்த எதிர்வினைக்கு காரணமாக இருக்கலாம்.
தன் ட்விட்டர் பக்கத்தில் கட்ஜு  ‛‛இது மட்டும் போதாது. பிசிசிஐ அதிகாரிகளை நிர்வாணமாக கம்பத்தில் கட்டி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் 100 கசையடிகள் கொடுக்க வேண்டும்’’ என ட்விட் தட்டியுள்ளார்.



ஓய்வுக்குப் பின் நீதிபதி கட்ஜு சகட்டு மேனிக்கு எல்லோரையும் விமர்சித்து வருகிறார். உச்ச நீதிமன்றமும் அதற்கு தப்பவில்லை. ‛ நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று  கிரிக்கெட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என கடந்த  ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  இதை அரசியலமைப்புக்கு எதிரானது என கட்ஜு விமர்சித்திருந்தார்.

‛‛உச்சநீதிமன்றம் செய்திருப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது; சட்டவிரோதமானது. நம் நாட்டு அரசியலமைப்பின்படி சட்டம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கு தனித்தனியாக ஒரு அமைப்பு உள்ளது. அதன்படிதான் இயங்க வேண்டும். சட்டம் இயற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னுரிமை. இப்படி நீதித்துறை சட்டம் இயற்றுமானால், அது தவறான முன்னுதாரணமாக இருக்கும்’’ என கட்ஜு விளாசியிருந்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.