Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

சிலையை இங்கிருந்து அகற்றுங்கள்! - காந்திக்கு ஏற்பட்ட ஆப்பிரிக்க சோதனை


நம் எல்லோருக்கும் தெரிந்த மகாத்மா காந்தியின் சுதந்திரத்துக்கான புரட்சி, தொடங்கிய இடமான தென்னாப்பிரிக்காவிலிருந்தே அவருக்கு எதிராக ஒரு சோதனை ஆரம்பித்துள்ளது. ‘‘காந்தி ‘இனவெறி’ கொண்டவர் என்றும் அவரது சிலை இங்கு இருக்கக் கூடாது உடனே அகற்றுங்கள்’’ என்றும் கூறி தென்னாப்பிரிக்காவில் உள்ள கானா பல்கலைக்கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரணம் என்ன?
கடந்த ஜூன் மாதத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கானா பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தபோது காந்தியின் நினைவாக அவரது சிலை அங்கே நிறுவப்பட்டது. தற்போது அந்தச் சிலையை அகற்றக்கோரி பல்கலைக்கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி உலகம் அறிந்த அகிம்சாவாத போராட்டக்காரர் என்றாலும், அவருக்குள்ளும் இனவெறி இருந்ததாக அவரது குறிப்புகளில் சொல்லப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்கக் கறுப்பு இனத்தவர்களை இழிவாகக் குறிப்பிடும் ‘கஃபிர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டிக் கூறியுள்ளனர். மேலும் காந்தி, இந்தியர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கறுப்பு இனத்தவர்களைக் குறைச்சலாகவே பாவித்தார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ‘அவரது சிலையை இங்கே நிறுவ அனுமதிக்க முடியாது’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது சிலையின் மீது வெள்ளைப் பெயின்டை ஊற்றித் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

காந்தியும்... சாதியும்!

காந்தி சாதி, இனம் ஆகியவற்றை ஒரு பொருட்டாகப் பார்ப்பவர்தான் என்றும் தலித் அரசியலை தொடக்கத்திலிருந்தே நசுக்கப் பார்த்தவர் என்றும் இந்தியா - பாகிஸ்தான் உட்பட மேலும் பல பிரிவினைகளுக்கு காந்தி காரணமாக இருந்துள்ளார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. காந்தி பற்றி இந்தியர்களே முன்னுக்குப் பின் முரணான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஆப்பிரிக்கர்களை என்னவென்று சொல்வது? ‘‘சிறு வயதிலேயே கீழ்சாதி பையனுடன் விளையாடக் கூடாது’’ என்று கூறிய புத்திலிபாயிடம், ஏன் என்று கேள்வி எழுப்பியவர் காந்தி. தன்னுடைய சாதிக் கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் அவர் பட்டப்படிப்பு படிக்க லண்டனுக்கே பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய முதல் வழக்கை வாதாடும்போது, தனது கட்சிக்காரரிடம் அக்குளில் வைத்திருந்த அவரது முண்டாசு துணியை, ‘தயவுசெய்து தலையில் கட்டிக்கொள்ளுங்கள்’ என்று கூறியவரும் இதே காந்திதான். இப்படி அவருடைய சாதி எதிர்ப்புக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சாதி பேதங்களற்ற அவரது கொள்கைகள்தான் அவருக்கு தென்னாப்பிரிக்காவில் பேராதரவு கிடைக்கச் செய்தன.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பினப் போராளியுமான நெல்சன் மண்டேலா, காந்தி மீது அளப்பறிய பற்றுக்கொண்டிருந்தார். அப்படியிருக்க அவர்கள் ஏன் காந்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்கு அவர்களின் பதில், “அப்போது அந்த வார்த்தை சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த வார்த்தை எங்களுக்கு இழிவாகத் தோன்றுகிறது. அப்படிப் பேசியவரின் சிலையை வைத்திருக்கவோ தினமும் அதனைக் கடந்து செல்லவோ எங்களால் முடியாது. அதனால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளனர்.



காந்திக்கு இப்படியொரு சோதனையா? அவர் தனது ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியதே வெள்ளையன் ஒருவன், கறுப்பாக உள்ள தன்னை முதல் வகுப்பு இரயில் பெட்டியிலிருந்து வெளியே தள்ளியதைப் பொறுக்க முடியாமல்தான். அதே தவறை அவர் எப்படி செய்திருப்பார்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.