Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

மும்பை அருகே போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: 70 பேர் கைது


மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானேயில் செயல்பட்டு வந்த 3 போலி கால்சென்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள், அமெரிக்கர்களை தொடர்புகொண்டு அந்த நாட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

அண்மையில் இதை கண்டுபிடித்த அமெரிக்க போலீசார், தானே போலீஸ் கமிஷனரை தொடர்புகொண்டு அந்த கால்சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த 3 கால்சென்டர்களிலும் நேற்று முன்தினம் 200 போலீசார் 3 பிரிவாக சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு இருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அமெரிக்கர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

அமெரிக்காவில் வரி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஊழியர்கள் போன் செய்து வருவாய் அதிகாரிகள் (இன்டர்னல் ரெவின்யூ சர்வீஸ்) பேசுகிறோம். இந்த பெயர்களில் உள்ளவர்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே உடனே பணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் போலீஸ் மற்றும் வரித்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுவார்கள்.

முதலில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். பின்னர் 5 ஆயிரம் அல்லது 3 ஆயிரம் டாலர்களுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள். அவர்களது பணம் இருக்கும் வங்கி அட்டை மூலம் ஆன்லைனிலேயே பணத்தை செலுத்தும்படி கூறுவார்கள். இப்படி 3 போலி கால்சென்டர்கள் மூலம் அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.

ஒவ்வொரு ஊழியரும் தினமும் குறைந்தபட்சம் 100 பேருக்கு பேச வேண்டும். இதில் 10 அல்லது 15 பேர் இந்த புகாருக்கு பொருந்தி வருவார்கள். அதில் 3 அல்லது 4 பேர் பணம் அனுப்புவார்கள். ஒரு ஊழியர் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலித்துவிட்டால் அவருக்கு கணிசமான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதனால் அந்த ஊழியர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்பட்டாலும், ஊக்கத்தொகை மூலம் சராசரியாக மாதம் ரூ.1 லட்சம் வரை பெற்றுவந்தனர்.

3 நிறுவனங்களிலும் 772 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 72 பேருக்கு மட்டுமே இந்த மோசடியில் தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஒரு கால்சென்டரின் நிர்வாகி ஹைதர்அலி மன்சூரி (வயது 35), இயக்குனர் அங்கித் குப்தா(35), மேலாளர் அர்ஜூன் வாசூதேவ் மற்றும் 2 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். 630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கால்சென்டர்களில் இருந்து 851 ஹார்டு டிஸ்க், சர்வர்கள், லேப்-டாப்கள், செல்போன்கள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

70 பேரும் நேற்று உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமெரிக்கர்களிடம் பேசி தினமும் ரூ.1½ கோடி வரை சம்பாதிக்க வேண்டும் என்பதே எங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. அப்போது அமெரிக்கர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஏற்கனவே தயார் செய்து கொடுக்கப்பட்ட 21 வகையான பதில்களை அளிப்போம். அத்தனையும் கால்சென்டர் நிறுவன நிர்வாகிகளின் ஏற்பாட்டில் தான் நடந்தது.

எங்களை வேலைக்கு சேர்த்தபோது பள்ளி படிப்பு இருந்தால் போதும், ஆனால் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்று தெரிவித்தனர். அமெரிக்கர்கள் போல ஆங்கிலம் பேசுவதற்கு எங்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமெரிக்கர்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவிலும் இந்த போலி கால்சென்டர்கள் மூலம் கைவரிசை காட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் சில போலி கால்சென்டர்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அவற்றின் நடவடிக்கையையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.