Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 28, 2016

கருணாநிதியை வாட்டும் 'மீசெல்ஸ்'! -கண்கலங்கி கதறிய அழகிரி


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிப்பதற்காக நேற்று கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி. ' பதவி அதிகாரத்தைவிட, பாசம்தான் அண்ணனுக்குப் பெரியது. தலைவரின் உடல்நிலையைப் பார்த்து கலங்கிவிட்டார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தி.மு.கவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, தி.மு.க தலைமையுடன் கடும் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தார். ஒருகட்டத்தில், கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் முற்றிலும் ஒதுக்கப்பட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மாற்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தது, சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியை விமர்சித்தது என தனி ஆவர்த்தனம் செய்து வந்தார். அவ்வப்போது, கோபாலபுரத்திற்கு வந்து தயாளு அம்மாவைச் சந்திப்பது, விமான நிலையத்தில் பேட்டி கொடுப்பது என தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் கருணாநிதி. ' அவரது உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால், அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம்' என தி.மு.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை 6.30 மணியளவில் கோபாலபுரம் வந்தார் அழகிரி. சுமார் 40 நிமிடங்கள் வரையில் கருணாநிதி அருகிலேயே இருந்தார். " அறிவாலயம், வீடு என தினமும் பரபரப்பாக இயங்கி வரும் தலைவர், கடந்த 17 நாட்களாகவே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். ' அப்பா எப்படி இருக்கிறார்' என நாள்தோறும் விசாரித்துக் கொண்டிருந்தார் அழகிரி. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து, நாள்தோறும் போனில் பேசி வந்தார் செல்வி. நேற்று மாலை தலைவர் படுத்திருக்கும் அறைக்குள் சென்றதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, ' எப்படி இருக்கிறீர்கள்' என விசாரித்தார். அவரும், ' இப்ப பரவாயில்லை' எனத் தெரிவித்தார். பிறகு, அவரது உடலில் ஏற்பட்டுள்ள கொப்புளங்களைப் பார்த்ததும், கண்கலங்கிவிட்டார் அழகிரி. எப்போதுமே, அதிகாரத்தைவிட பாசத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அந்தவகையிலேயே பார்க்கச் சென்றார். இதில், எந்தவித அரசியல் முக்கியத்துவமும் இல்லை. அவர் சென்ற பிறகும், ' அழகிரி...அழகிரி...' என்று அழைத்ததாக, கோபாலபுரத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள். தலைவரை அவர் சந்தித்தில், எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி" என நம்மிடம் விவரித்த அழகிரி ஆதரவாளர்கள்,

" தலைவருக்கு கால் தவிர, பிற இடங்களில் பரவலாக சிறு சிறு கொப்புளங்கள் முளைத்துள்ளன. இதனால், கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறார். உடல் வலியும் இருப்பதால், அதற்கேற்ப மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறார். அவரது அக்காள் சண்முகத்தம்மாளுக்கும் இதேபோல் பிரச்னை இருந்தது. இதை மீசெல்ஸ்(Measles) என்று சொல்கிறார்கள். ஆட்டோ இம்யூன் பிரச்னை என்றும் சொல்கிறார்கள். அவரது உடலில் உள்ள கொப்புளங்கள் ஆறி வருகின்றன. இன்னும் சில நாட்களில் குணமாகிவிடுவார்" என்றனர்.

" தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க தலைமையோடு, அழகிரி நெருக்கம் காட்டுவதை ரொம்பவே ரசிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ' இது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குமோ?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது" என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.