Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

மதுரை மல்லிக்கு திடீர் ஆபத்து


'மதுரை மல்லி' மதுரையில் மட்டுமல்ல.. உலக அளவில் பிரசித்தி பெற்ற மல்லிகை. இந்த மதுரை மல்லி என்று சொல்லப்படும் 'குண்டுமல்லி' பார்க்க வெண்மை நிறத்தில் பளபளவென்று இருக்கும். கடந்த 2010-ம் ஆண்டு மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர், மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடும் கொடுக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மல்லி 2 மாதங்களாக தண்டுத்துளைப்பான் பூச்சிகளால் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறது.

             இது பற்றி பேசிய மதுரை வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், 'புவிசார் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரையோ அல்லது பொருளின் தோற்றத்தையோ அடைமொழியாக வைத்து அழைக்கப்படும் பெயருக்கு "புவிசார் குறியீடு' என்று பெயர். இக்குறியீடானது எந்த பொருளின் இடத்தினுடைய தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் பெயராகவும் விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு 'புவிசார்குறியீடு' அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2003-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி, நல்ல மணமும், நீண்ட காம்பும் கொண்ட காரணத்துக்காக மதுரை மல்லிக்கு இந்த புவிசார் குறியீடு கிடைத்தது.



'மதுரை மல்லி' என்ற புவிசார் குறியீடு மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லிகளுக்கு மட்டும் சொந்தம். மதுரை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்த இந்த 'மதுரை மல்லி' தற்போது தண்டுத்துளைப்பான் பூச்சிகளால் தாக்கப்பட்டு சிவப்புநிறமாக மாறுகிறது. ஒரு கிலோ பூவிற்கு 120 கிராம் நோய்வாய்ப்பட்டு வீணாகிறது. இதனால் மலர்ச்சந்தையில் மதுரை மல்லியின் விற்பனை குறையும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் பரவலாக 80 ஆயிரம் ஏக்கரில் மல்லிப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மற்ற ஊர்களில் விளையும் மல்லிகை பூக்கள் ஒருநாளில் வாடிவிடும். ஆனால் மதுரை மல்லி இரண்டு நாள் வாடாமல் தாக்குப்பிடிக்கும்.

      விவசாயிகள் மதுரை மல்லியினை சரியான பக்குவத்தில் முறையான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தாக்கிய தாவரங்களையும், நோய்த்தாக்கிய பக்க கிளைகளையும் வெட்டி எரிய வேண்டும். காய்ந்த சருகுகளை அகற்ற வேண்டும். இதுபோன்ற பராமரிப்புக்களை செய்யும்போதுதான் பூச்சித் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கு மாறாக, பூச்சிகள் பூக்களை தாக்கினால் விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லியை வாங்கி தெளிக்கின்றனர். காலையில் பறிக்கும்பூ இரவு சிங்கப்பூர் சென்றுவிடும். அளவுக்கு உலகமெங்கும் மதுரை மல்லிக்கு மவுசு இருக்கிறது.



இது தவிர குவைத், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. விவசாயிகள் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கைவிட்டு இந்த தண்டுத்துளைப்பான் பூச்சியை தடுக்க வேப்ப எண்ணெய் 30 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். முறையான கவாத்து, முறையான இயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். விவசாயிகள் ரசாயன உரங்களை தெளிக்கும்போது பூக்களின் மணமும், நிறமும் மாறிவிடும். மதுரை மல்லிக்கு அடையாளமே மணமும், நிறமும் தான். இதனால் மதுரை மல்லிக்கான சிறப்பை இழக்கிறது. இதனால் புவிசார்குறியீடு ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இல்லை. ஆனால் பேர் கெட்டுப்போன பின் ஒன்றும் செய்ய முடியாது, விவசாயிகள் முழுமையாக இயற்கைக்கு மாறி மதுரை மல்லியை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.