Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

மீண்டும் ஆவின் பாலில் கலப்படமா? அதிர்ச்சியில் ஆவின் நிர்வாகம்



ஆவின் பால் கலப்பட வழக்கில் ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வந்த வைத்தியநாதன், ஆவின் பால் டெண்டரில் மீண்டும் கால் பதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

‘லாரிகளில் கொண்டுசெல்லப்படும் ஆவின் பால் கலப்படம் செய்யப்படுகிறது’ என்று வெளியான பகீர் தகவலால் 2014-ல் தமிழகமே அதிர்ந்தது. அது தொடர்பாக நடந்த விசாரணையில், ‘ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி அளவுக்கு ஆவின் பாலில் கலப்பட ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு உள்ளது. பாலுக்குப் பதிலாக, வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீர் அல்லது பவுடர் கலக்கப்பட்டு உள்ளது’ என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆவின் பால் ஊழலுக்குப் பின்னால் இருந்த வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த  அதிகாரிகள் சிலர் மீதும் நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.பால்வளத் துறை அமைச்சர் பதவி, மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது.  வைத்தியநாதனின் நிறுவனமான தீபிகா டிரான் ஸ்போர்ட், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டு, கருப்பு பட்டியலில் அந்த நிறுவனத்தின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

2014-2016 ஆண்டு ஆவின் பால் டெண்டரை பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் சுமார் 275 டேங்கர் வாகனங்கள் தனியாரிடம் இருந்து இயக்கப் பட்டன. தற்போது, ஆவின் நிறுவனத்துக்கு என 66 டேங்கர் வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், 2016-2018-ம் ஆண்டு ஆவின் பால் டெண்டரில் 241 டேங்கர் வாகனங்களுக்குத் தனியாரிடம் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வைத்தியநாதன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 2016-2018 ஆண்டுக்கான ‘டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான டெண்டருக்கு’ வைத்தியநாதன் விண்ணப்பித்துள்ளார். மூத்த அமைச்சர் ஒருவரது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடான முறையில், வைத்தியநாதன் டெண்டரைக் கைப்பற்றி மீண்டும் ஆவினில் கால் பதிக்க இருப்பதாக ஆவின் வட்டாரத்தில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இது தொடர்பாக வைத்தியநாதனிடம் பேசினோம். “என் மீது போடப்பட்டு இருப்பது பொய் வழக்கு. அதனை எதிர்ந்து வழக்கு தொடர்ந்து உள்ளேன்.  அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, சட்டப்படி நான் குற்றமற்றவன். அதுவரை, அரசுத் துறை சார்பாக நடக்கும் எந்த ஒரு டெண்டரிலும் நான் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.