Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 16, 2016

உஷாராம்மா உஷாரு.. பெண்களே!... உஷாரு....


கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் பெண் அவள். வயது 30-ஐ தொட்டுக்கொண்டிருக் கிறது. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். இவளே மூத்தவள்.

சொந்தக்காரர் ஒருவரது அறிமுகத்தோடு அவளை ஒரு குடும்பம் பெண் பார்க்க வந்தது. மாப்பிள்ளை இளைஞனையும் கூடவே அழைத்துவந்தார்கள். பெண் பார்க்கும் சம்பிரதாயம் நடந்தது.

அந்த இளைஞன் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி, சுயமாக சம்பாதித்து வருகிறான். சொந்த வீடு, வாகனம் இருக்கிறது. ஓரளவு வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன். அதனால் மகளை, அவனுக்கே திருமணம் செய்துகொடுத்துவிடலாம் என்று அவளது பெற்றோர் முடிவு செய்தார்கள். அப்போது இளைஞனின் தாயார், ‘என் மகனை பற்றிய ஒரே ஒரு உண்மையை கூறிவிடுகிறேன். அவனுக்கு குடிப் பழக்கம் உண்டு’ என்றார்.

அதை கேட்டதும் பெண் அதிர்ச்சியை வெளிப்படுத்த, இளைஞனின் தாயாரோ ‘இந்த காலத்தில் குடிக்காதவன் யாரும்மா? எல்லாருக்குமே எப்படியோ அந்த பழக்கம் வந்திடுது. ஆனால் உன்னை பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நீ எப்படியாவது அவனை திருத்திவிடுவாய். உன்னை மாதிரி புத்திசாலித்தனமான, தைரியமான பெண்ணால்தான் அவனை திருத்தமுடியும்’ என்று, டன் கணக்கில் ‘ஐஸ்’சை தூக்கி அவள் தலையில் வைத்தார்.

குடும்ப நிலை கருதி அவளும் சம்மதித்தாள். இருவருக்கும் திருமணம் நடந்தது. தனிக்குடித்தன வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அவனிடம் மாற்றம் ஏற்படவில்லை. தினமும் குடித்துவிட்டு வீடு திரும்பினான். அவள் பக்குவமாக எடுத்துசொல்லிப்பார்த்தாள். பலனில்லை. பின்பு தட்டிக்கேட்டாள். உடனே அவன் வீட்டிற்கு வராமல் கோழிப்பண்ணையிலே அதிகமாக குடித்துவிட்டு தூங்கத் தொடங்கினான். அவனது உடல் நலம் பாதித்தது.

அவள் பணிபுரியும் இடத்தில் எல்லோருடனும் சகஜமாக பழகக்கூடியவள். ஆண்களிடம் நட்புரீதியாக பேசுவாள். அதை தப்பாக எடுத்துக்கொண்டு அவன் சந்தேகப்பட்டான். ‘தான் இரவில் வீட்டிற்கு வராமல் இருப்பதும், தனது உடல் நோய்வாய்ப்பட்டுப்போனதும் மனைவிக்கு சாதகமாகிவிட்டது. அதனால் மற்ற ஆண்களோடு நெருக்கமாக பழகுகிறாள்’ என்று அவன் சந்தேகம் கொண்டான்.

அதனால் கோழிப்பண்ணையில் தூங்குகிறவன், திடீர்திடீரென்று நள்ளிரவு நேரங்களில் ரகசியமாக வீட்டை நோக்கி வருவான். தன் வீட்டிற்குள் யாராவது நுழைகிறார்களா? என்று வெகுநேரம் தூரத்தில் இருந்து வீட்டை கண்காணிப்பான். பின்பு வீட்டின் பின்புறத்தில் வந்து திருடன் போன்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பான். உள்ளே ஏதாவது நிழலை பார்த்தாலும், இன்னொரு ஆண் இருப்பதாக கருதிக்கொண்டு கதவை தட்டி, உள்ளே புகுந்து அங்குலம் அங்குலமாக தேடுவான்.

கணவனின் இந்த நடவடிக்கைகள் அவளை மனதளவில் கடுமையாக பாதித்தது. இனிமேலும் அவனோடு வாழமுடியாது என்று கருதிய அவள், தனது தாய் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தாள். அதை கணவரிடம் சொன்னதும் அப்படியே அவளது காலில் விழுந்துவிட்டான். ‘நீ என்னை விட்டு போய்விடாதே! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று காலைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

இப்போது அன்றாட நிகழ்ச்சியாக
என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா?

மனைவி வேலைக்கு போகும் சாலையில் உட்கார்ந்திருந்து, நோட்டமிடுகிறான். வீடு திரும்பியதும் அவள் அருகிலே உட்கார்ந்துகொள்கிறான். இரவில் வீட்டில் அவன் படுத்தாலும் தூங்குவதில்லை. தான் தூங்கும் நேரம் மனைவியை தேடி யாராவது வெளி ஆண் வந்துவிடுவானோ என்று நினைத்து கொட்ட கொட்ட விழித்திருக்கிறான். அவள் தாங்க முடியாத மனவேதனையில், தாய் வீட்டிற்கு போவதாக சொன்னால் உடனே பொது இடம் என்றுகூட பார்க்காமல் அவள் காலில் விழுந்து அழத் தொடங்கிவிடுகிறான்.

‘இப்படி எல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களே!’ என்று, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள், அந்த பெண்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.