Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

திருக்குவளையில் பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை


திருக்குவளை தியாகராஜசுவாமி கோவிலில் மரகதலிங்கத்தை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


திருக்குவளை தியாகராஜசுவாமி கோவிலில் இருந்த மரகதலிங்கத்தை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தியாகராஜசுவாமி கோவில்


நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ளது பிரம்புரீஸ்வரர் கோவில். வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தியாகராஜருக்கு தனி சன்னதி உள்ளது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். சப்தவிடங்கர் தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் ‘அவினி விடங்கர்’ என்று அழைக்கப்படும் மரகதலிங்கத்தை பிரம்மா, அகத்தியர், பஞ்ச பாண்டவர்கள் உள்பட பலர் வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.

இந்த கோவிலில் உள்ள மரகதலிங்கம் அரை அடி உயரம் உடையது. இது பல கோடி ரூபாய் மதிப்புள்ளது ஆகும். இந்த மரகதலிங்கம் கோவிலில் உள்ள தியாகராஜர் சன்னதியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கும். கோவிலில் வழக்கமான பூஜை முடிந்த பின்னர் சன்னதி பூட்டப்பட்டு, அதற்கான சாவி கோவில் அர்ச்சகர் கணேசன், மெய்காப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் இருக்கும்.

மரகதலிங்கம் கொள்ளை


கடந்த 9–ந்தேதி மாலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் கணேசன் மற்றும் மெய்காப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் சன்னதியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாதுகாப்பு பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கோவில் சன்னதியின் இரும்பு கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இது குறித்து கணேசன், ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரும் கோவில் கண்காணிப்பாளர் சவுரிராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் திருக்குவளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருக்குவளை தாசில்தார் சுதாராணி, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

3 தனிப்படைகள் அமைப்பு


மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தஞ்சை டி.ஐ.ஜி. செந்தில்குமாரும், கொள்ளை நடந்த கோவிலுக்கு வந்து பார்வையிட்டார். மேலும் மரகதலிங்கத்தை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், நாகை தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் மரகதலிங்கத்தை கொள்ளையடித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

முசுகுந்தசக்கரவர்த்தி கொடுத்தது


இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:–

திருக்குவளையில் உள்ள தியாகராஜசுவாமி கோவிலில் கொள்ளை போன மரகதலிங்கத்தை ராஜேந்திர சோழன் கொண்டு வந்ததாக எந்த சான்றும் இல்லை. இந்த மரகதலிங்கத்தை இந்திரனிடம் இருந்து முசுகுந்தசக்கரவர்த்தி கொண்டு வந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. திருவாரூரை தலைமை தலமாக கொண்டு நாகப்பட்டினம், திருக்காறவாசல், வேதாரண்யம், திருநள்ளாறு, திருவாய்மூர், திருக்குவளை ஆகிய 7 சிவன்கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக மரகதலிங்கத்தை முசுகுந்தசக்கரவர்த்தி கொடுத்ததாக ஐதீகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.