Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

ஏ.டி.எம். சென்ற ரயில்வே ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி!


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்த ரயில்வே ஊழியருக்கு கள்ள நோட்டுக்களை கொட்டியது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் எதிரில் ஏராளமான ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் நேற்று இரவு ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். பணம் எடுத்துவிட்டு வெளியே வந்த அவர், அதை அருகில் உள்ள கடைக்கு சென்று கொடுத்தார். அப்போது, அவர் கொடுத்த 500 ரூபாய் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர், பணத்துடன் பெரியமேடு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. ரயில்வே ஊழியர். இவர், நேற்றிரவு பணி முடிந்து மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துள்ளார். இதில் இருபத்திஎட்டு 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மதிப்பு 14,000 ரூபாய். அந்தப்பணத்துடன் எங்களிடம் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம். ஏ.டி.எம். மையத்தில் எப்படி கள்ளநோட்டு வந்தது என்பது தொடர்பாக வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவல்படி அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முன்பெல்லாம் கள்ளநோட்டுகளுடன் வங்கிக்கு செல்லும் நபரும், ஒரு குற்றவாளி என்றே கருதப்பட்டார். இதற்கு பயந்து பலர் வங்கிக்கு செல்வதில்லை. ஆனால், இப்போது நடைமுறை அப்படி இல்லை. கள்ளநோட்டுகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்த நோட்டுகள் எப்படி வந்தது என்பதை எளிதில் கண்டுபிடிக்க வழி உள்ளது. இதனால், ஏ.டி.எம் இயந்திரங்களில் கள்ளநோட்டுகள் வந்தால், வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உடனடியாக பணத்துடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை கொடுத்துவிடுவார்கள். இந்த நடைமுறைக்கு சில நாட்கள் ஆகும்" என்றார்.

கள்ள நோட்டுக்களை கொட்டிய ஏ.டி.எம் மையத்துக்கு உடனடியாக வங்கி அதிகாரிகள் விரைந்து வந்தனர். இன்னும் அதில் கள்ள நோட்டுக்கள் உள்ளதா என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் அந்தத் தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. ஏ.டி.எம். மையங்களில் இதுபோல கள்ள நோட்டுக்கள் வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களே. எனவே, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பும்போதே இதுபோன்ற குறைகளை தவிர்க்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.