Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

தலித் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய உத்தரவு, மாணவர்கள் போராட்டம்


பீகாரில் அதிக மதிப்பெண் பெற்ற காரணத்தினால் சக மாணவர்களால் தலித் மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகியை கைது செய்ய போலீஸ் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே பள்ளியில் நிர்வாகி மற்றும் பிற ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரில் பள்ளி சீருடையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி, சக மாணவர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இயக்குனருக்கு மனித வளத்துறை மத்திய இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பீகாரின் கன்னிப்பூர் பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதற்கிடையே பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜீவ் ராஜன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பள்ளி நிர்வாகமும் இதுதொடர்பாக விசாரிக்க பள்ளிக்குள் மூன்று நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்தது. இதுதொடர்பான விசாரணை முடிவின்படி மொத்தம் உள்ள 120 ஆசிரியர்களில் 22 ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் ராஜீவ் ராஜனை பள்ளி நிர்வாகம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி சஸ்பெண்ட் செய்தது. தலைமை ஆசிரியர் ராஜீவ் ராஜன் அமைத்த ஐவர் கொண்ட ஒழுங்கு குழுவும் விசாரித்து இரு மாணவர்களை 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தது.

இவ்விவகாரத்தில் தலித் மாணவரை தாக்கிய 6 மாணவர்களில் முக்கிய குற்றவாளிகளான இரு மாணவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருவம் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருக்கும் 4 மாணவர்களும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜனை கைது செய்ய முசாப்பர்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி பாதியா உத்தரவிட்டு உள்ளார். ராஜன் பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை மறைக்க முயற்சி செய்து உள்ளார். ஆதாரங்களை அழிக்க முயற்சித்து உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவரை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார். இதற்கிடையே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சிறு பள்ளி குழந்தைகளும் பள்ளிக்கு வரவில்லை.

ஆசிரியர்களை மாற்றுவதால் தங்களுக்கு ஏற்படும் இழப்பை மாணவர்கள் முன்வைத்து உள்ளனர். ஆசிரியர்களின் மாற்றம் எங்களுடைய படிப்பை பாதிக்கும், புதியதாக வரும் ஆசிரியர்களுடன் நெருங்கிய நட்பு ஏற்படுவதற்கு கூடுதல் காலம் ஆகும். இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுத்த தலைமை ஆசிரியர் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார் என்பது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்களின் வாதமாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.