Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

ஓசூர் அருகே பரபரப்பு 20 தமிழக வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு


ஓசூர்,

கொலை வழக்கு விசாரணைக்காக தமிழக எல்லைக்குள் சாதாரண உடையில் வந்த கர்நாடகா போலீசாரை தமிழக போலீசார் அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த கர்நாடகா போலீசார் தமிழக பதிவெண் கொண்ட 20 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

20 வாகனங்கள் நொறுக்கப்பட்டன

ஓசூர் அருகே கர்நாடக எல்லையான பள்ளூரில் ராமன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் மற்றும் போலீசார் சாதாரண உடையில் நேற்று இரவு ஓசூருக்கு கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் தாங்கள் கர்நாடகா போலீசார் என்று கூறினார்கள். இதையடுத்து அவர்களிடம் தமிழக போலீசார் அடையாள அட்டையை கேட்டார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் காரை மீண்டும் கர்நாடகாவை நோக்கி ஓட்டச் சொன்னார். அங்கு அத்திப்பள்ளி நினைவு வளைவு அருகில் நின்ற அவர், கர்நாடகாவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தமிழக பதிவெண் கொண்ட கார், மோட்டார் சைக்கிள்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வாகனங்களை ஓட்டி வந்தவர்களையும் கர்நாடகா போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் குவிப்பு

இதனால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் நேற்று இரவு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக இரு மாநில எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தலைமையில் போலீசார் தமிழக எல்லைக்கு விரைந்தனர். அதே போல பெங்களூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத்சிங் தலைமையிலான போலீசார் அத்திப்பள்ளிக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து உடைக்கப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நேற்று இரவு நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து தமிழக போலீஸ் தரப்பில், பெங்களூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத்சிங்கிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு காரணமாக அத்திப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.