Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 7, 2016

ரூ.2.5 லட்சம்...! இது யாருடைய சம்பளம் தெரியுமா?


7-வது ஊதியக்குழுவில் உயர்பதவியில் இருக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் விரோதபோக்கை காட்டுவதாக கொந்தளிக்கிறார் இந்திய ரயில்வே எஸ்.சி., எஸ்.டி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன். இதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரயில்வேக்கு தனிபட்ஜெட் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?

92 ஆண்டுகளாக ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடப்பட்டது. தற்போது தனி பட்ஜெட்டுக்குப் பதிலாக பொது பட்ஜெட் என்ற அறிவிப்பால் ரயில்வே துறைக்கு பல்வேறு பாதகமான சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே மத்திய அரசு, ரயில்வே துறையில் தனியார்மயத்தை புகுத்தி வருகிறது. இதனால் ரயில்வே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பொதுபட்ஜெட் என்று வரும்போது ரயில்வேக்குரிய முக்கியத்துவம் கிடைப்பது கேள்விகுறி.

7-வது ஊதியக்குழு சம்பளம் ரயில்வே ஊழியர்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

நிச்சயமாக இல்லை. நாங்கள் குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாய் என்று வலியுறுத்தினோம். ஆனால் தற்போது 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். அதேநேரத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகளின் சம்பளம் 90,000 ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் விரோதபோக்கை வெளிகாட்டுகிறது. மேலும் வழக்கத்தை விட அரியர்ஸ் தொகையிலும் 10 சதவிகிதம் ஐ.டி பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு நடவடிக்கையிலும் இந்த அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.

இந்திய ரயில்வேயில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன?

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. சுமார் இரண்டரை லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் கடந்தாண்டு 7 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அந்தப் பணியிடங்களோடு புதிய பணியிடங்கள் என 12 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பாததால் மூன்று  நபர்கள் செய்யும் பணியை ஒருநபர் செய்யும் நிலை உள்ளது.

விருப்ப ஓய்வு திட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?

இன்றைய சூழ்நிலையில் ரயில்வே துறையில் பல்வேறு நடவடிக்கைகள் தொழிலாளர்களின் குரல்வளையை நெரிப்பதாகவே உள்ளது. 20 ஆண்டுகள் அனுபவமுள்ள ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ரயில்வே நிர்வாகம் மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது. ரயில்வே நிர்வாகம் விதித்துள்ள கெடுபிடியால் பதவி உயர்வு, பணிபாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளதே. அதற்கும் தனியார் மயத்துக்கும் தொடர்பு உள்ளதா?

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் இந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையை கலைத்துவிடவும் ரயில்வே துறை ஆலோசித்து வருகிறது. இதனால் ரயில்வே உடமைகளுக்கும், பயணிகளின் பாதுகாப்பிலும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ரயில்வே பாதுகாப்பு படையை கலைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.


ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கு என்ன காரணம்?

ரயில்வே துறை அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தாங்கள் சார்ந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே செயல்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் தமிழகத்துக்குத் தேவையான ரயில்வே திட்டங்களில் அக்கறை செலுத்தவில்லை. அதேநேரத்தில் கேரள மாநில எம்.பி.க்கள் கட்சிபாகுபாடின்றி ரயில்வே திட்டங்களுக்கு குரல் கொடுக்கின்றனர். இதனால் தமிழகத்தை விட கேரள மாநிலம் ரயில்வேயில் அசூர வளர்ச்சியடைந்துள்ளது. தமிழக எம்.பி.க்களும் கட்சிபாகுபாடின்றி செயல்பட்டால் நம்மாநிலமும் ரயில்வேயில் வளர்ச்சி பெறும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.