Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 7, 2016

'முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைவார்..!' அப்போலோ வாசலில் ராகுல்காந்தி


முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உடல்நலம் பெற அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை வளாகத்திலேயே அதிமுகவினர் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். ஏராளமான அதிமுகவினர் தினந்தோறும் குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை 11.40 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் வருகைக்காக காத்திருந்தார். பின்னர், ராகுலுடன் அவர் மருத்துவமனைக்குள் சென்றார். அங்கு முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார்.

சுமார் 35 நிமிடத்திற்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  "டெல்லியில் இருந்து வந்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது சார்பிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பிலும் நலம்பெற தெரிவிக்க வந்தேன். முதலமைச்சர் உடல்நலம் தேறி வருகிறார். அவர் விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச சக்தி கிடைக்க விரும்புகிறேன். அவர் விரைவில் நலமடைவார்" என்று கூறினார்.

ராகுல் காந்தி வருகையையொட்டி அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.