Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர்


அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படி எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் சென்றனர். அப்போதும், ' காவிரி பிரச்னை மற்றும் அரசின் பொது நிர்வாகம் பற்றியே கேட்டறிந்ததாக' ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. அப்போலோ மருத்துவமனைக்கு இணையாக, ஆளுநர் அலுவலக அறிக்கைகளும் தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். வெளியில் வந்தவர், ' மத்திய அமைச்சரவையில் இருந்தபோதே ஆளுநரை நன்கு அறிவேன். இது நட்புரீதியிலான சந்திப்பு' என சிரித்துக் கொண்டே பேட்டியளித்தார்.

இதன்பின்னர், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் ஆளுநரை சந்தித்துவிட்டுத் திரும்பினார். ' என்னதான் விவாதிக்கப்படுகிறது ஆளுநர் மாளிகையில்?' என்ற கேள்வியை ராஜ்பவன் வட்டாரத்தில் கேட்டோம். நம்மிடம் விவரித்தவர்கள், "அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வந்தாலும், வரவேற்று உபசரிப்பு கொடுப்பது ஆளுநர் மாளிகை வழக்கம். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் இருக்கிறார். தமிழ்நாட்டின் சூழலில் அவர் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகளை அறிந்து கொள்ளவும் விரும்புகின்றனர். இதுபற்றித்தான் நேரடி சந்திப்பில் விவாதித்தார்கள்.

அவர்களிடம் பேசிய ஆளுநர், ' நான் பொறுப்பு ஆளுநராக இருக்கிறேன். மத்திய அரசைப் பொறுத்தவரையில் நான் வெறும் பார்வையாளன்தான். சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள், ட்விட்டரில் பேசுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. மோடி என்ன நினைக்கிறாரோ, அதை செயல்படுத்துவது மட்டும்தான் என் வேலை. அவர் மனதில் என்ன ஓடுகிறது என்றும் தெரியவில்லை. முதல்வர் குணமடைந்து வரும் வரையில், தமிழ்நாட்டில் நிர்வாக பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பதை கேபினட்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு பார்வையாளனாக கவனித்துக் கொண்டிருக்கிறேன் என மனம் திறந்து பேசினார்" என விவரித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.