Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 3, 2016

அதிர்ச்சி... மகிழ்ச்சி..! யோகேஷ்வர் தத் வெள்ளி தங்கமாகிறது!


லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆஜர்பைஜான் மல்யுத்த வீரர் டோக்ருல் அஸ்கரோவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், இந்திய வீரர் யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆஜர்பைஜான் வீரர் டோக்ருல் அஸ்கரோவ் தங்கப் பதக்கமும், ரஷியாவின் பெசிக் குடுகோவ் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.

சமீபத்தில் ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் விதிமுறைப்படி பதக்கம் வென்றவர் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினால், அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டு, அடுத்த இடம் பிடித்தவருக்கு வழங்கப்படும். எனவே, யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊக்கமருந்தில் சிக்கிய பெசிக் குடுகோவ், 2013ல் கார் விபத்தில் இறந்து விட்டார். எனவே, பெசிக் குடும்பத்தினரிடம் இருந்து வெள்ளிப் பதக்கத்தை வாங்க யோகேஷ்வர் தத் பெருந்தன்மையுடன் மறுத்திருந்தார்.

பொதுவாக, திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி, ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களின் ரத்த, சிறுநீர் மாதிரிகள் 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டு, அடிக்கடி பரிசோதிக்கப்படும். அப்படி சோதித்ததில், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டோக்ருல் அஸ்கரோவ் சமீபத்தில் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மல்யுத்த சங்கம் மற்றும் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்ஸி (வாடா) உறுதியான தகவலை தெரிவிக்கவில்லை.

இருப்பினும், யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவரது  வெள்ளிப்பதக்கம், தங்கமாக அப்கிரேடு செய்யப்பட்டால், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்தராவுக்கு அடுத்ததாக, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார் யோகேஷ்வர் தத்.

இதற்கிடையே, யோகேஷ்வரின் வெள்ளி தங்கமாக ‘அப்கிரேடு’ செய்யப்பட மாட்டாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அமெரிக்காவைச் சேர்ந்த கோல்மன் ஸ்காட் அரையிறுதியில் டோக்ருல் அஸ்கரோவிடம் தோல்வியடைந்து, பின் ‘ரீபேஜ் ரவுண்டு’ சுற்றில் வென்று, வெண்கலம் வென்றார். எனவே, கோல்மன் ஸ்காட் அல்லது யோகேஷ்வர் தத் இருவரில் யாருடைய பதக்கம் தங்கமாக ‘அப்கிரேடு’ செய்யப்படும் என்ற குழப்பமும் நிலவுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த தகவலை உறுதிபடுத்தாதவரை அமைதி காப்பதே நல்லது. இதை யோகேஷ்வர் தத் நன்றாகவே உணர்ந்துள்ளார். ‘எனக்கு தங்கம் கிடைத்தால், உண்மையிலேயே அது நாட்டுக்கு பெருமை அளிக்கும் விஷயம். ஆனால், அதற்கு முன் சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்கிறார் யோகேஷ்வர் தத்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.