Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

’தோனியிடம் பேசி சி.எஸ்.கே-ல சேரணும்!’: கிறிஸ் கெய்லின் சென்னை பாசம்


‘சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியதும், அந்த அணியில் இணைவது குறித்து தோனியிடம் பேசுவேன்’ என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர்கள் இந்த நொடிக்காக வாழ்பவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் கலகலப்பாகி விடும் என நிரூபித்துள்ளார் கிறிஸ் கெய்ல். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை பிரபலப்படுத்துவதற்காக சென்னை வந்துள்ள அவர், முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த, விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

ஜாலி பேர்வழியான கிறிஸ் கெய்லை, அவருக்கே உரிய பாணியில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட ‘தேர்’ மூலம் வரவேற்று அமர்க்களப்படுத்தியது பள்ளி நிர்வாகம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்து நிற்க, முன்னே செண்டா மேளம் முழுங்க, ‘சாம்பியன்... சாம்பியன்...’ பாடல் ஒலிக்க, தேரில் கிராண்ட் என்ட்ரி கொடுத்தார் கெய்ல். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், வேலம்மாள் பள்ளியில் இருந்து பல்வேறு சர்வதேச செஸ் போட்டிகளில் சாதித்த 11 பேருக்கு ‘செக்’ வழங்கி பாராட்டினார். பின், மேடையிலையே மாணவர்கள் உடன் ‘சாம்பியன் டான்ஸ்’ ஆடி கலகலப்பாக்கியதோடு, ‘இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் சாம்பியன்தான்’ என நெகிழ வைத்தார்.

அடுத்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜாலியாக பதில் சொன்னார். எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கெய்ல், ‘சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியதும், அந்த அணியில் இணைவது குறித்து தோனியிடம் பேசுவேன்’ என்றார்.

சூதாட்ட விவகாரத்தில் சிக்கியதால், சிஎஸ்கேவுக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதும், கெய்ல் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவதும் நாம் அறிந்ததே.

‘உங்களால் எப்படி எந்நேரமும் கூலாக இருக்க முடிகிறது’ என ஒரு மாணவன் கேட்க, அதற்கு கெய்ல் ‘‘அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் ஒரு விஷயத்தை செய்தால், மன அழுத்தத்துக்கு அங்கு வேலையே இல்லை. நெருக்கடியுடன் இருப்பதாக உணர்ந்தால், அது நம் செயல்பாட்டிலும் எதிரொலிக்கும்’’ என்றார்.

‘நீங்கள் ஆட்டோகிராப் வாங்க நினைக்கும் நபர் யார்?’ என்ற மாணவனின் கேள்விக்கு, ‘‘இப்போதெல்லாம் பெரிதாக யாரும் ஆட்டோகிராப் வாங்க விரும்புவதில்லை. ஆனால், எனக்கு தீபிகா படுகோனே உடன் செல்ஃபி எடுக்க ஆசை’’ என்றார்.

அதுவரை ஜாலியாக பேசிக் கொண்டிருந்த கெய்ல் கடைசியாக, ‘‘ஒரே நேரத்தில் பல துறைகளிலும் ஜொலிக்க வேண்டுமென்றால், நேரம் தவறாமை மிக முக்கியம்’ என, சீரியஸ் டோனில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு... ‘பை பை’ எனக் கிளம்பியேவிட்டார்.

சி.எஸ்.கே-ல சேருங்க கெயில்..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.