Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

கிராம வங்கிகளில் 16560 அதிகாரி பணிகள் ஐ.பீ.பி.எஸ். பொது எழுத்து தேர்வு அறிவிப்பு


கிராமிய வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 16 ஆயிரத்து 560 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. பொதுத் துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி யிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர் காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம்.

தற்போது மண்டல கிராமிய வங்கிகளுக்கான (ஆர்.ஆர்.பி.) அலுவலக உதவியாளர், அதிகாரி பணியிடங்களுக்கான ‘சி.டபுள்.இ.-5’ தேர்வை ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. இதன் மூலம் 56 கிராமிய வங்கிகளில் ஆபீஸ் அசிஸ்டன்ட், அதிகாரி (ஸ்கேல்-1, 2,3) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மொத்தம் 16 ஆயிரத்து 560 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 8 ஆயிரத்து 824 பணியிடங்கள் உள்ளன. பிரிவு வாரியாக பொதுப்பிரிவுக்கு 4 ஆயிரத்து 400 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 2 ஆயிரத்து 192 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 1,459 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 773 இடங்களும் உள்ளன.

இது தவிர அதிகாரி (ஸ்கேல்-1 ) பணிக்கு 5 ஆயிரத்து 539 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-2 அக்ரிகல்சர்) பணிக்கு 152 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-2, மார்க்கெட்டிங்) பணிக்கு 75 பேரும், அதிகாரி ஸ்கேல்- 2, டிரெஸ்ஸரி) பணிக்கு 19 பேரும், அதிகாரி ஸ்கேல்- 2, சட்டம்) பணிக்கு 55 பேரும், அதிகாரி (ஸ்கேல்-2, சி.ஏ.) பணிக்கு 35 பேரும், அதிகாரி (ஸ்கேல்-2, ஐ.டி.) 130 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-2, பொது வங்கிப் பணிகள்) 1,533 இடங்களும், அதிகாரி (ஸ்கேல் - 3) பணிக்கு 198 இடங்களும் உள்ளன.

தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தரப்படும் மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் இந்த 56 வங்கிகளில் அறிவிக்கப்படும் பணியிடங்களில் வாய்ப்பு பெறலாம்.

இந்த தேர்வு எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆபீசர் (ஸ்கேல் 1) பணி விண்ணப்பதாரர்கள் 18-30 வயதுடையவர்களாகவும், ஸ்கேல்-2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்கேல்-1 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஸ்கேல்-2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற என்ஜினீயரிங் படிப்புகள், சி.ஏ., சட்டப்படிப்பு, எம்.பி.ஏ. நிதி, எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கும், அது தொடர்பான பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்த அதிகாரி பணியில் வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

பொது ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர், மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 14-9-2016
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30-9-2016
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.