Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

வள்ளுவரையும் விட்டு வைக்காத அரசியல்! -நள்ளிரவில் பெயர்த்தெடுத்த அரசு இயந்திரம்


திருப்போரூரில் திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ' அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க நிர்வாகிகளின் உள்கட்சி சண்டையே காரணம்' எனக் கொதிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே திருவள்ளுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தப் பூங்காவில், ' திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்' என தமிழ் ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, திருவள்ளுவர் சிலை அமைக்க பூங்காவில் பீடம் அமைக்கப்பட்டு, சிலையும் கொண்டு வரப்பட்டது. அரசின் முறையான அனுமதிக்காக சிலை ஏற்பாட்டாளர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூங்காவில் மூடிவைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது. சிலை பீடமும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்தது. யார் இந்த வேலையைச் செய்தது என தெரியாமல் தீவிர விசாரணையில் பொதுமக்கள் இறங்கினர். இறுதியாக, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், பீடத்தை அகற்றிய தகவல் கிடைத்து அதிர்ச்சியில் உறைந்தனர். இதைக் கேள்விப்பட்டுக் கொந்தளித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ' செங்கல்பட்டு கோட்டாட்சியர், போலீஸார் உதவியுடன் பீடத்தை உடைத்து திருவள்ளுவர் சிலையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. சிலை அங்கு காணவில்லை. தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது. எனவே, மீண்டும் அந்த இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவி, திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருந்தார்.

சிலை ஏற்பாட்டாளர்களிடம் பேசினோம். " சிலை அகற்றப்பட்டதற்கு முழுக் காரணமே ஆளுங்கட்சியின் ஈகோ போக்குதான். பேரூராட்சியின் தலைவராக ம.தி.மு.கவின் சக்தீஸ்வரி சிவராமன் இருப்பதால்தான் சிலை திறப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுவே, அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் தலைவர் பதவியில் இருந்திருந்தால், சிலை திறப்புக்கு அரசு அனுமதி அளித்திருக்கும். நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடமாக இருந்திருந்தால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் இருந்து இந்நேரம் நோட்டீஸ் வந்திருக்கும். திருமண மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்கு அனுமதி கேட்டு வந்த ஒருவர்தான், சிலை அமைப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார்.

சிலை வடிக்கும் வேலைகளும் நடந்து வந்தன. இத்தனைக்கும் சிலையைத் திறக்காமல் துணி போட்டு மூடி வைத்திருந்தோம். சிலை நிறுவுவதற்கு அரசிடம் அனுமதி கேட்டு காஞ்சிபுரம் கலெக்டருக்கு மன்றத்தின் தீர்மானத்தை அனுப்பி வைத்தோம். பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் முதற்கொண்டு 15 மன்ற உறுப்பினர்களும் வள்ளுவர் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருந்தனர். ஆளுங்கட்சியின் அரசியல் காரணங்களுக்காக வள்ளுவர் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார்" என்கின்றனர்.

திருப்போரூர் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் சமரனிடம் பேசினோம். " சாதியாலும் மதத்தாலும் பிளவுபட்டுக் கிடக்கின்ற மக்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக வள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் தரப்பில் மிகுந்த ஆர்வத்தோடு சிலை அமைக்கும் பணிக்கு உதவி செய்ய முன் வந்தார். பேரூராட்சி மன்ற வளாகத்திற்குள் காந்தி சிலை இருப்பதுபோல, அங்கேயே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தால் இப்படியொரு அவல நிலை ஏற்பட்டிருக்காது. சாலையோர ஆக்ரமிப்பு என்ற பெயரில் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இரவோடு இரவாக வள்ளுவர் சிலையை அகற்றிவிட்டனர். சிலரது அரசியலால் வள்ளுவர் சிலை அகற்றப்பட்டுவிட்டது. இதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்" என்றார் கொதிப்போடு.

" பேரூராட்சி வளாகத்திற்குள்ளேயே அண்ணா, பெரியார், காந்தி ஆகியோருக்கு சிலைகள் இருக்கின்றன. திருவள்ளுவருக்கு சிலை வைக்க மன்ற வளாகத்தில் இடம் இல்லை. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே வள்ளுவர் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட இருக்கிறோம்" என்கின்றனர் திருப்போரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.