Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

தப்பித்தேன் பிழைத்தேன்-சிறுகதை


தாதம்பட்டி என்னும் ஊரில், சுகந்தி என்பவள் இருந்தாள். அவள் மிகவும் முட்டாளாக இருந்ததால், அந்த ஊரில் யாரும் அவளை திருமணம் செய்ய முன் வரவில்லை.
வெளியூரிலிருந்து இளைஞன் ஒருவன், அவளைப் பெண் பார்க்க வந்தான். அவனுக்கு அவளைப் பிடித்து விட்டது.
இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர்.
''இங்கே இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் நீங்கள் செல்ல வேண்டும்,'' என்று இளைஞனை வற்புறுத்தினர்.
ஒரு கிண்ணத்தை மகளிடம் கொடுத்து, ''அறைக்குச் சென்று இதில் எண்ணெய் கொண்டு வா; பலகாரம் செய்யலாம்,'' என்றாள் தாய்.
மகளும், கிண்ணத்தை எடுத்தவாறு துள்ளிக் குதித்து அறைக்குள் சென்றாள்.
அங்கே பெரிய எண்ணெய் பீப்பாய் இருந்தது. எண்ணெய் வருவதற்காக அடிப்பகுதியில் குழாய் இருந்தது. குழாயைத் திறந்து எண்ணெயைப் பிடிக்கத் துவங்கினாள் அவள்.
அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்.
'திருமணமான ஓராண்டில் எனக்கு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு அவர் தன் தாத்தாவின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பார். நான் என் தாத்தாவின் பெயரையே வைக்க வேண்டும் என்பேன். நான் சொல்வதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். குழப்பம் வருமே! என்ன பெயர் வைப்பது?' என்று சிந்தித்தபடி இருந்தாள்.
கிண்ணத்தில் எண்ணெய் நிரம்பி தரையில் வழிந்து ஓடத் துவங்கியது.
நேரம் ஆகியும்; மகள் வரவில்லையே என்ற எண்ணத்தில் அறைக்குள் நுழைந்தாள் தாய்.
எண்ணெய் தரையில் ஓடுவதையும், மகள் கன்னத்தில் கை வைத்தபடி இருப்பதையும் பார்த்தாள்.
''அடியே என்ன செய்கிறாய்? இப்படி எண்ணெய் வழிந்து ஓடுகிறதே,'' என்று கேட்டாள்.
''அம்மா எனக்குப் பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தால், முதலில் ஆண் குழந்தைதான் பிறக்கும். அதற்கு நம் தாத்தா பேர் வைப்பதா? அவருடைய தாத்தாவின் பேர் வைப்பதா?'' என்று கேட்டாள்.
தாய்க்கு மகளின் குழப்பம் புரிந்தது.
அவளும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள்.
'நம் வீட்டுப் பெரியவர் பெயர் வைத்தால் அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாமும் அவர்கள் வைக்கும் பெயரை ஏற்றுக் கொள்ள மாட்டோம். பெயர் வைக்கும் சிக்கலால் மகளின் திருமண வாழ்க்கையே இருண்டு விடுமே என்ன செய்வது...' என்று கவலையில் ஆழ்ந்தாள்.
பீப்பாயில் இருந்து எண்ணெய் கீழே வழிந்து நான்கு புறமும் ஓடியது.
அறைக்குள் சென்ற தன் மகளும், மனைவியும் திரும்பாததைக் கண்டு கணவன் உள்ளே நுழைந்தான்.
இருவரும் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதையும், எண்ணெய் தரையில் வழிந்து ஓடுவதையும் பார்த்தான்.
''என்ன நடந்தது? ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அவர்களும் நடந்ததைச் கூறினர்.
'ஐயோ நெடுங்காலத்திற்குப் பிறகு திருமணம் நிகழ இருக்கிறது. பெயர் வைக்கும் சிக்கலால் என் மகளின் வாழ்க்கை இருண்டு விடுமே... என்ன செய்வது?' என்று கவலையில் ஆழ்ந்தான் அவன்.
பீப்பாயில் இருந்த எண்ணெயில் பெரும்பகுதி தரையில் ஓடிக் கொண்டிருந்தது.
மூவரும் திரும்பாததைக் கண்ட இளைஞன் அறைக்குள் நுழைந்தான்.
அவர்கள் நடந்ததைக் கூறினர்.
'இப்படிப்பட்ட முட்டாள்கள் குடும்பத்தில் பெண் எடுக்க இருந்தேனே... நல்லவேளை தப்பித்தேன்' என்று ஓட்டம் பிடித்தான் அவன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.