Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 3, 2016

ஆர்.எஸ்.எஸ்... அன்றும், இன்றும், என்றும் ஒன்றுதான்! - ராகுல் காந்தி


புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் தெரிவித்த ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறேன். எனது கருத்தில் அன்றும், இன்றும், என்றும் உறுதியாக இருப்பேன். இது தொடர்பான வழக்குகளை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே’ என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். தொண்டரான ராஜேஷ் குண்டே என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி ராகுல் காந்தி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது. அதனால், உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல், தன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில், ‘ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் காந்தியை கொன்றது என தான் கூறவில்லை, அதனுடன் தொடர்புடைய ஒருவர்தான் கொலை செய்தார்’ என்று கூறியதாக மும்பை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த தகவலை உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'ஆர்எஸ்எஸ் குறித்து நான் தெரிவித்த ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறேன். நான் கூறிய எந்த ஒரு வார்த்தையையும் திரும்பப் பெறவில்லை. எனது கருத்தில் அப்போதும், இப்போதும், எதிர்காலத்திலும் உறுதியாக இருப்பேன். இது தொடர்பான வழக்குகளை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் யு.ஆர்.லலித் பதிலளிக்கும்போது, "கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தேசப் பிதாவைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். என்று குற்றம்சாட்டுவது காங்கிரஸ் கட்சியின் வழக்கமாக உள்ளது. மகாத்மா காந்தி படுகொலைக்காக உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குற்றம்சாட்டும் உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசவில்லை என்றால், எந்த சூழ்நிலையில் அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினார். எதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிப் பேசினார் என்று கூற வேண்டும்' என்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கபில் சிபல், "எதிர்தரப்பின் வாதம் அரசியல் பேச்சு போல உள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுகிறோம்" என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிரான மேல்முறையீட்டில் இந்த நீதிமன்றம் தலையிடாது. மேலும், வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக விலக்கும் அளிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவை விசாரணை நீதிமன்றத்திலேயே அவர் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.