Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

பங்குச்சந்தை - ஏமாற்றங்கள் ஏன்? #ShareMarketTips


"வாரீர் வாரீர்... தினமும் பங்குச் சந்தையில் பத்து ஆயிரம் சம்பாதிக்கலாம்; எந்தவித கடின உழைப்பும் இன்றி குறைந்த முதலீட்டில் மாதம் ஐம்பதாயிரம் ஈசியாக சம்பாதிக்கலாம்" என்ற வசனத்தை நீங்கள் நிச்சயம் கேட்டு இருக்கலாம் அல்லது விளம்பரங்களில் பார்த்து இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இதுபோன்ற விளம்பரங்கள் ஏமாற்று வேலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் இன்னமும் சிலர் இதுபோன்ற கவர்ச்சி வார்த்தைகளை நம்பியும், விளம்பரத்தினால் கவரப்பட்டும், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பங்குச் சந்தையில் இழந்து வருகின்றனர்.

பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டவர்கள், பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எப்படிப் பணத்தை எளிதாகச் சம்பாதிக்க முடியும். பங்குச் சந்தையில் ஒவ்வொரு பங்குகளின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இதில் எந்த ஒரு காரணங்களுமே அறியாமல் தினமும் பத்தாயிரத்தை வேண்டுமானால் எளிதாக இழக்கலாம். ஆனால், பங்குச் சந்தை வர்த்தகத்தைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதாக பணத்தை சம்பாதிக்க முடியாது. மாறாகக் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழக்கத்தான் நேரிடும்.

பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏற/இறங்க முக்கிய காரணங்கள் உங்களுக்காக...

· பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான முக்கிய செய்திகள். நிறுவனத்தின் செயல்திறன், நிர்வாகம், விற்பனை, வருவாய், லாபம், நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனத்தின் தேவை மற்றும் விநியோகம்.

· பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலக செய்திகள் (உதாரணம்: பிரெக்ஸிட் நிகழ்வு, சீன நாணயத்தின் மதிப்பு குறைப்பு)

· இந்திய பொருளாதாரம்

· கச்சா எண்ணெய் விலை

· பணவீக்கம்

· பங்குச் சந்தையில் முக்கிய நிகழ்வுகளின் தாக்கம்

· பயங்கரவாத தாக்குதல்கள்

· அரசியல் காரணிகள்

· பொருளாதார காரணிகள்

· பொருளாதார கொள்கைகள்

· நிதி கொள்கை (Fiscal Policy)

· பணவியல் கொள்கை (Monetary Policy)

· சார்ட் பேட்டன்கள்

· பரபரப்பூட்டும் விஷயம்

· முதலீட்டாளர்களின் பயம் மற்றும் பேராசை

என பங்குச் சந்தையில் ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் ஒரளவுக்கூட தெரிந்துகொள்ளாமல் பங்குச் சந்தையில் எப்படிப் பணத்தை சம்பாதிக்க முடியும்?

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க வழி!

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையானது, இப்போது வெறும் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதைப்போலத்தான் பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏறுவதும், இறங்குவதும். சில விஷயங்களை கடைபிடித்தால் பங்குச் சந்தை வருமானத்துக்கு நல்ல வழிதான்.

அதிக பணம் வேண்டாமே!

பங்குச் சந்தையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்; பத்தாயிரம் மட்டுமே முதலீடு செய்துவிட்டு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்; இழந்த பணத்தை மீட்க வேண்டும்; கடன் வாங்கி, நகையை விற்று பங்குச் சந்தையில் பணத்தை போட்டு சம்பாதிக்க வேண்டும் போன்ற மனநிலையைத் தவிருங்கள். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதைவிட அதில் இழக்காமல் இருப்பதே முக்கியம்.

நல்ல நிறுவனம்!

எதிர்காலத்தில் ஜொலிக்க வாய்ப்புள்ள ஐந்து நல்ல துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒவ்வொரு துறையிலும் ஒரு நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நிறுவனத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.

பொறுமை அவசியம்!

ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கிய உடனே அதன் விலை ஏறுவதில்லை. அதைப்போலத்தான் பங்குச் சந்தையும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு ஒரே நாளில் அதன் விலை அதிகரிக்காது. ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளுக்காவது அந்நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக அந்த நிறுவனத்தின் பங்குகளை இறங்கும்போதும் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொள்ளுங்கள்.

பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பொறுத்தவரை குறுகிய கால நோக்கத்தில் முதலீடுகளைச் செய்யாதீர்கள்; பணத்தைப் பன்மடங்காக பெருக்க நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து காத்திருப்பதுதான் முக்கியம். பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழி நீண்ட கால முதலீடுதான். இதை இப்பொழுதாவது உணர்ந்து நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள், நிச்சயம் நீங்களும் பயனடைவீர்கள். 

1 comment:

  1. இந்த பங்குசந்தை என்பதே ஒரு சூதாட்டகளமாக உள்ளது,இதில் தினம்,தினம் பலர் பல ஆயிரங்கள்,லச்சம்,கோடிகளை இழந்து வருகின்றனர், இந்த பங்கு விலைகள்,புள்ளிகள் ஏன் ஏறுகின்றன,இறங்குகின்றன என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது, நல்ல பெரிய நீண்ட நாட்களாக உள்ள கம்பனிகளின் பங்குகள் அதிகமாக விலையேற்றம் காணமல் பலகாலம் ஒரே நிலையில் உள்ளன, ஆனால் ஒன்றுக்கும் உதவாத சிறிய கம்பனிகளின் பங்குகள் தாறுமாறாக விலை ஏறி,இறங்கி ஆட்டம் காட்டுகின்றன, இவற்றின் போக்கை யாராலும் கணிக்க முடிவதில்லை, இதில் ஏதோ சூது உள்ளதாகவே சந்தேகம் உள்ளது, ஒரு குறுப்பிட்ட குழுக்கள் அல்லது சிலர் திட்டமிட்டு வேண்டுமென்றே இப்படி செய்திகள் வெளியிட்டு செயற்கையாக பங்கு விலைகளை ஏற்றி இறக்கி விளையாடி கோடிகளில் பணம் கொள்ளையடித்து வருவதுபோல் தெரிகிறது, இதற்கு அரசுகளும் உடந்தை ஆக உள்ளார்களா என புரியவில்லை.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.