Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

அன்புநாதன் தொடங்கி வைத்ததை, அழகிரி முடித்து வைத்தார்!' -நத்தம் விஸ்வநாதன் சரிந்த கதை


நத்தம் விஸ்வநாதனின் அமைப்புச் செயலர் பதவியும் பறிபோய்விட்டது. ' சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக, முதல்வரை சந்தித்துப் பேச முயற்சி எடுத்தார் நத்தம். அப்படியொரு சந்திப்பையே அம்மா விரும்பவில்லை' என்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.கவினர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி மற்றும் கீர்த்திலால் காளிதாஸ் நகைக் கடை ஆகியவற்றில், நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில், ' கணக்கில் காட்டப்படாத ஏராளமான நகைகளும் ஆவணங்களும் பிடிபட்டுள்ளதாக' வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ' கைது வரையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பாயலாம்' என்பதால், ' கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்படுவதாக' அறிவித்தது அ.தி.மு.க தலைமை. இந்த அதிரடி, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.கவில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. தேர்தல் நேரத்திலேயே சீனிவாசனுக்கு, தலைமை முக்கியத்துவம் கொடுத்துவிட்டதால், நிர்வாகிகள் பலரும் அவர் பக்கமே நிற்கின்றனர். இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

" தேர்தல் நேரத்தில் எங்கிருந்தெல்லாம் பணம் பிடிபட்டதோ, அதையொட்டியே வருமான வரித்துறை சோதனை நடந்தது. குறிப்பாக, கரூரில் அன்புநாதன் குடோனில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரையில் பிடிபட்டது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. ' குடோனில் பிடிபட்டது ஐந்து கோடியா? 100 கோடியா?' என்ற சர்ச்சை தேர்தல் காலம் முழுக்க நீடித்தது. ஒருகாலத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக இருந்து, பின்னர் நத்தத்தின் நெருக்கமான வளையத்திற்குள் இருந்தார் அன்புநாதன். மேற்கு மாவட்டங்களில் தேர்தல் நேரத்தில் பண விநியோகம் செய்யும் முக்கிய குடோன்களில் ஒன்றாக, அன்புநாதன் வீடு இருந்தது என்ற தகவலும் வெளியானது. இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக் கழகம் எந்தப் பதிலும் சொல்லவில்லை. கரூரில் பிடிபட்ட பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்ற கோபமும் மேலிடத்திற்கு இருந்தது.

அந்த நேரத்தில், ஐவரணி என்ற பெயரில் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களில் ஈடுபட்ட மூத்த அமைச்சர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். தேர்தலில், நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல், ஆத்தூரில் ஐ.பெரியசாமிக்கு எதிராக போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. 'தோல்வி நிச்சயம்' என்று தெரிந்தே, போட்டியிட்டார் நத்தம். மின்வாரிய ஊழல்கள் ஒருபுறம் இருந்தாலும், தலைமையின் கவனத்திற்குக் கொண்டு வராமல் வர்த்தக தொடர்புகளில் ஈடுபட்டது, உள்ளூர் கட்சி நிர்வாகிகளை புறக்கணித்தது, தேர்தல் தோல்வி என அனைத்து வழிகளிலும் சிக்கலுக்கு ஆளானார் நத்தம். ' அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது' என திண்டுக்கல் மாவட்ட கட்சிக்காரர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்து அதிர வைத்தார் ஜெயலலிதா. அதிலும், நீடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், மின்வாரியத்திலும் மதுவிலக்கு ஆயத் தீர்வையிலும் நத்தத்தின் விளையாட்டுக்கள்தான். முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்வதற்கு முன்பே, நத்தத்தின் அனைத்து தொடர்புகளும் ஆராயப்பட்டன.

இதில்,  தலைமையின் கண்ணசைவு இல்லாமல், முதல்வர் பெரிதும் நம்பும் அதிகாரிகள் துணையுடனே, இவ்வளவும் நடந்தது என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும், அவரது வெளிவட்டார வர்த்தக தொடர்புகள்தான், மேலிடத்தை அதிர வைத்தன. முதல்வரை கோபத்தை உணர்ந்து கொண்டு, சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே முதல்வரை சந்திக்க இரண்டு முறை கடிதம் கொடுத்தார் நத்தம். அவரோடு வைத்திலிங்கமும் கடிதம் கொடுத்தார். வைத்தியை சந்தித்த முதல்வர், நத்தத்திற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அப்போதே 'நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்து கொண்டார். தேர்தல் நேர பண விநியோகத்தைக் கணக்கில் வைத்தும் மின்துறையில் நடந்த ஊழல்களையும் கணக்கில் கொண்டும் ஒட்டுமொத்த ரெய்டும் நடந்துள்ளதாக அ.தி.மு.க மேலிடம் கருதுகிறது. நாளை நத்தத்தின் மீது கைது நடவடிக்கை வரை பாய்ந்தால், கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலேயே, கட்சிப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்" என்றார் விரிவாக.

" தற்போது நடந்து முடிந்த, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில், முக்கியமான சில ஆட்டங்கள் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமான என்.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்றன. கடந்த 28-ம் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் பிரீமியர் லீக் ஆட்டங்களைக் காண்பதற்காக வந்தார் மு.க.அழகிரி. என்.பி.ஆர் கல்லூரியின் மைதானத்தை சர்வதேச தரத்தில் பராமரிப்பதால், மிகுந்த ஆர்வத்தோடு போட்டியைக் காண வந்தார். இந்தப் போட்டியில் மதுரை அணி தோற்றுப் போனதும், வருத்தத்தோடு கிளம்பிவிட்டார் அழகிரி. அ.தி.மு.க நிர்வாகியின் கல்லூரிக்குள், மு.க.அழகிரி வந்து சென்றதைப் பற்றி மேலிடத்தின் கவனத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டது. தேர்தலில் அன்புநாதன் குடோனில் தொடங்கிய ஆட்டம், அழகிரி ரசித்த ஆட்டத்தில் வந்து முடிந்துள்ளது. வருமான வரி ரெய்டும் பிரீமியர் லீக் ஆட்டங்களும் அவரது பதவி பறிப்புக்கும் ஒரு காரணமாக அமைந்துவிட்டன" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.