Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

கர்நாடகத்தில் வலுக்கும் போராட்டங்கள்! - பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு


தமிழகத்திற்கு வருகின்ற 27-ம் தேதி வரை காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

காவிரிப் பிரச்னையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், காவிரிப் பிரச்னை தொடர்பாக நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழகத்துக்கு இன்று (செப்.21) முதல் வருகின்ற 27-ம் தேதி வரை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மண்டியா, மைசூரு, ஹுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தர்னா, சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெங்களூரு குமாரகுருபாவில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. போலீசாருடன் 1 பட்டாலியன் துணை ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், இந்த போராட்டங்கள் காரணமாக பெங்களூரில் வருகின்ற 25-ம் தேதி வரை மீண்டும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

துணை ராணுவ வீரர்கள், போலீசார் உதவியுடன் வாகனங்களை சோதனையிட்ட பிறகு அனுப்பி வைக்கின்றனர். அதேபோல், தமிழக போலீசாரும் எல்லையில், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.