Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது...! குமுறும் ஹென்றி டிபேன்


மனித உரிமை, சூழலியல் காப்பாளர்களான சமூக செயற்பாட்டாளர்கள் மீது மோசமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது தமிழக காவல்துறை. இதன் தொடர்ச்சியாக மனித உரிமைகளுக்காக போராடி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய போலீஸ் முயற்சிக்க பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல் எழுந்துள்ளது.

யார் இந்த ஹென்றி டிபேன்?

மனிதஉரிமை தளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தடைகளைக் கடந்து  மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வது, ஆவணப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவது போன்ற  பணிகளை செய்து வருபவர்  ஹென்றி டிபேன்.  கடந்த 10 ஆண்டுகளில் 22 மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மனிதஉரிமை கல்வியை கொண்டு சென்றவர். அவரது  மனித உரிமை செயல்பாட்டுக்காக  அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு,  சமீபத்தில் சர்வதேச மனித உரிமை விருதை வழங்கி கௌரவித்தது. இந்த சூழலில் தான் நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் ஹென்றி டிபேன்.

கடந்த மே மாதம் மதுரை மாவட்டம், மொட்டமலைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதிக்கு வேலைக்குச் சென்று பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்கள் கண்காணிப்பகத்தின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது, அதில் செய்யாத திருட்டுக் குற்றத்திற்காக காவல்துறை விசாரணை எனக் கூறி அழைத்துச் சென்று 63 நாட்களாக அப்பாவி கூலித் தொழிலாளர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கியும், பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதாகத் தெரியவந்ததும், நீதிமன்ற ஆட்கொணர்வு மனு மூலம் பெண்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸ் செய்த அத்துமீறலை பொது வெளியில் அம்பலப்படுத்தியது மக்கள் கண்காணிப்பகம். ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டே உயர்நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார்.

இதற்காகத்தான் ஹென்றி மீது வழக்கு

அதோடு நிற்காமல் இப்பிரச்சினை குறித்து மக்கள் கண்காணிப்பகம் மூலம் கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு குழுவின் அறிக்கையின் படி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டது. அப்படி மதுரை புதூரில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் மூத்த தோழர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார்.
அந்த ஆர்ப்பாட்டம் முடிந்த 10 நாட்களுக்குப் பின்னர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாகவும், காவல்துறையினரை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஹென்றி டிபேன் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு நிற்காமல் ஹென்றி டிபேனை கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது காவல்துறை. ஆனால் அடுத்தடுத்து எழுந்த கண்டனங்கள் கைது செய்யும் முயற்சியை தடுத்தது.
சமீபத்தில்  எவிடென்ஸ் கதிர் அலுவலகத்தில் போலீசார் அத்து மீறிய  விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடுமையாகவே பேசியிருக்கிறார் ஹென்றி. இந்த ஆத்திரத்தில் தான் இந்த வழக்கை போலீசார் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹென்றி டிபேன் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து வைகோ, ஜவாஹிருல்லா போன்றவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது

இது தொடர்பாக ஹென்றி டிபேனிடம் பேசினோம், "போலீஸ் பொய் வழக்குகளுக்கு நாம் அஞ்சவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரத்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்று நம் சட்டம் கூறுகிறது. சட்டத்தின் ஆட்சியை தூக்கி பிடிக்கவே பலத்த குரலில் போராட்டம் செய்கிறோம். இல்லையென்றால் இந்த நாட்டில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே நியாயம் கிடைக்கும். ஏழைகளுக்கு நீதி கிடைக்காது. பலத்த குரலில் பேசுவது என்றால் அவதூறாகவோ, அசிங்கமாகவோ பேசுவது கிடையாது. உண்மையை பேசுவது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவது. அப்படி பேசுவது போலீசுக்கு பிடிப்பதில்லை. அவர்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து வருவதால் பொய் வழக்கு போட்டு  சமூக மற்றும் மனித உரிமைப் போராளிகளை முடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
சமீபத்தில் பியூஸ் மானுஷ்க்கு நடந்தது. எவிடென்ஸ் கதிரிடமும் காவல்துறை அராஜமாக நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை பொய் வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் மனித உரிமை குரலை அமுக்கி விட முடியாது. ஐநாவில் 1998 ல் போடப்பட்ட மனித உரிமை பிரகடனத்தில் மனித உரிமைப்போராளிகளை அரசுகள் பாதுகாக்க வேண்டும். அவர்களை மனித உரிமை காப்பாளர்கள் என்று அழைக்கப்படவேண்டுமென்று கூறியுள்ளது. இந்த தீர்மானம் பற்றியெல்லாம் போலீசுக்கும் தெரியாது. அரசுக்கும் தெரியாது," என்றார்.
நீதி கேட்டு போராடியவர் மீது வழக்குப் போட்டதன் மூலம் தன் மீது தீராத களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது தமிழக காவல்துறை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.