Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

அடடா... இவரையா மிஸ் செய்தோம்?!


'ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்ற ரகுராம் ராஜன் தகுதியற்றவர்; அவர் கவர்னராக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல; பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் வட்டி விகிதங்களை அதிகரித்தார்; இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தினார்' என ரகுராம் ராஜன் மீது சுப்ரமணியன் சாமி குற்றம்சாட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. ரகுராம் ராஜன் பதவி காலத்தில் எஃப்சிஎன்ஆர், வட்டி விகிதம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு என எண்ணிலடங்கா பிரச்சினையை சாதுர்யமாக சமாளித்து இருந்தார். ஆனால், வட்டி விகிதத்தை மட்டும் வெகுவாக குறைக்கவில்லை என்பதுதான் இவர் மீது இறுதிவரை சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகவே இருந்தது. இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. பல சாதனைகளை செய்துவிட்டே செல்கிறார் ரகுராம்ராஜன்.

ரகுராம் ராஜனும், வட்டி விகிதமும்! 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி பதவி காலத்தில் ரகுராம் ராஜனின் செயல்பாடு மற்றும் வட்டி விகிதம் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

"ரிசர்வ் வங்கியின் கடந்த 3 ஆண்டு செயல்பாட்டைப் பொறுத்தவரை வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து குறைத்து வந்துள்ளனர். ஆனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த அளவில் வங்கிகள் வட்டியைக் குறைக்க வில்லை என்பதுதான் உண்மை. வங்கிகள் வட்டியைக் குறைக்காத பட்சத்தில் எப்படி ரிசர்வ் வங்கியால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும்?
வங்கிகள், வாராக்கடன் அதிகமாக உள்ளதால் வட்டியைப் பெரியளவில் குறைக்கவில்லை என்று பதிலளிக்கின்றனர். ஆனால், ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தபோதும் வங்கிகள் குறைக்கவில்லை; இந்த நிலையில் மறுபடியும் ஏன் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்; இதனால் வங்கிகளின் லாபம் மட்டுமே அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி நினைக்கிறது. வங்கிகளைப் பொறுத்தவரை ஃபிக்சட் டெபாசிட்டில் மட்டுமே வட்டியைக் குறைத்து இருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவில் வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டால் மீண்டும் அதிகரிப்பது மிகக் கடினம். அடிக்கடி வட்டி விகிதத்தை ஏற்றி, இறக்கி வந்தால் ஒரு நிலைத்தன்மையே இல்லாமல் போகிவிடும். ரகுராம் ராஜன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை என்பதுதான் முக்கியமானது. ஆனால், இதைச் சொல்வது எல்லாம் பெரிய நிறுவனங்கள்தான். அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் சிறப்பாகவே உள்ளது" என்றார்.

ரகுராம் ராஜனின் வட்டி விகிதத்தைக் குறைக்காததால் தொழிற்துறை வீழ்ச்சி கண்டது; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது; எனவே அவரை எவ்வளவு சீக்கிரம் சிகாகோ அனுப்புகிறோமோ அது நாட்டுக்கு நல்லது என சுப்ரமணியன் சாமி குற்றம்சாட்டினார். ஆனால், வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை ரகுராம் ராஜனின் செயல்பாடு மிக சரியானதுதான் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் பதிலளிக்கின்றனர்.

யாரும் உடன் இருக்கும்போது அவர்களின் அருமை தெரியாது; இழந்த பிறகுதான் அவர்களின் அருமை தெரியும் என்பார்கள். அதைப்போலத்தான் ரகுராம் ராஜன் விஷயத்தில் மத்திய அரசுக்கு தெரியவில்லையா? அடடா இவரைச் செல்ல விட்டு விட்டோமே என்று ஆதங்கப்படும் நாள் வருமா? 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.