Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 16, 2016

ஹிலாரியின் நிமோனியா ஜனநாயகக் கட்சியையே வாட்டுகிறதா?


செப்டம்பர் 11, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட தினம். அதன் நினைவு விழாவுக்குச் சென்ற அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தானாக நிற்கமுடியாமல், உடன் இருப்பவர்களின் உதவியை நாடியுள்ளார். அமெரிக்கத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஹிலாரியின் உடல்நிலைக் கோளாறு அவரையும், ஜனநாயகக் கட்சியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிமோனியா காய்ச்சல்!

இந்தநிலையில் ஹிலாரி கிளின்டன் தன் பிரசாரங்களைச் சில நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளார். இதற்குக் காரணம், அவரின் உடல்நலக் கோளாறுதான். ஹிலாரி கிளின்டன் தன் உடல்நிலை பற்றிய முழு மருத்துவ விவரங்களைத் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 9-ம் தேதி அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான மருந்துகளை 10 நாட்களுக்கு உட்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அன்று செய்யப்பட்ட சி.டி. ஸ்கேன் அறிக்கைப்படி, ‘அவருக்கு லேசான பாக்டீரியல் நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான ஆண்டிபயாடிக் சாப்பிட்டு வருகிறார’் என்றும் கூறப்பட்டது.

‘‘ஆரோக்கியமாக இருக்கிறார்!’’

ஹிலாரி கிளின்டனின் தனிப்பட்ட மருத்துவரும், மவுண்ட் கிஸ்கோ மருத்துவக் குழுவின் தலைவருமான டாக்டர் லிசா பார்டேக், ‘‘மருந்து மற்றும் ஓய்வினால் நிமோனியாவில் இருந்து மீண்டுவருகிறார் ஹிலாரி கிளின்டன். மேலும், அவர் இந்த நாட்டுக்கு அதிபர் ஆகி சேவை செய்ய ஆரோக்கியமாக இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிப்பு!

கடந்த 11-ம் தேதி நடந்த நினைவுவிழாவில் கலந்துகொண்ட ஹிலாரி, அவரது உதவியாளர்கள் உதவியுடன் மேடையைவிட்டு வெளியேறிய வீடியோவில், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெளிவாக வெளியாகியுள்ளது. கடந்த வாரங்களில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போதும் அதிக இருமலோடு காணப்பட்டிருக்கிறார் ஹிலாரி. பொதுவிழாக்களில் கலந்துகொண்டபோது அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்ததும், நிமோனியா கண்டறியப்பட்ட பிறகு, அவரின் உடல்நிலை பற்றி வெளிப்படுத்தாமல், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிரசாரம் செய்ததும் ஹிலாரியின் உடல்நிலையை மேலும் பாதித்துள்ளது. ஹிலாரி கிளின்டனின் மருத்துவப் பதிவுகளில் அவரின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவை சரியான நிலையில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், அதிபர் பதவிக்குப் போட்டியிட முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளில் சொல்லப்பட்டு உள்ளது.

டிரம்ப் மருத்துவர் அறிக்கை!
குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அவரது உடல்நிலை குறித்து  மிகக்குறைவான தகவலை வெளியிட்டுள்ளார். அவரது தனிபட்ட மருத்துவர் ஹரோல்டு போன்ஸ்டீன், ‘‘டிரம்ப், அதிபர் வேட்பாளராகப் போட்டியிட ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளார். ட்ரம்ப் அதிபர் ஆனால், அவர்தான் முழு உடல் தகுதி கொண்ட அமெரிக்க அதிபர்’’ என்ற கருத்தையும் வெளியிட்டிருந்தார்.

கடந்த 14-ம் தேதி டாக்டர் ஓஸ் நடத்தும் டி.வி பேட்டி ஒன்றில் டிரம்ப், அவரின் மருத்துவர் ஹரோல்டுடன் நடந்த உடல் பரிசோதனை பற்றிய ஒரு பக்க சுருக்கப் பதிவை வெளியிட்டார். இரண்டு கட்சி வேட்பாளர்களின் மருத்துவர்கள் இருவரும், ஹிலாரியும் டிரம்ப்பும் ஆரோக்கியமான நிலைமையில் இருப்பதாகத் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.

தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்ட நிலையை அடைந்துள்ள நிலையில், ஹிலாரியின் உடல்நிலை ஜனநாயகக் கட்சியை வருத்தமடையச் செய்துள்ளது. ஆனாலும், ஹிலாரியின் மருத்துவ அறிக்கைகள் சாதகமாகத்தான் உள்ளன என்பதால், அந்தக் கட்சி கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளது. விரைவில், ‘பிரசாரங்களுக்கு திரும்புவார்’ என ஹிலாரி தரப்புக் கூறுகிறது. உடல்நலக் குறைவு வெற்றியைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே ஹிலாரி தரப்பின் ஒரே கவலை... உடல்நிலையைத் தாண்டி ஹிட் அடிப்பாரா ஹிலாரி!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.