Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 17, 2016

உங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் பேக்கில் இதெல்லாம் இருக்கக்கூடாது?


பள்ளிக்குச் செல்லும்போது ஸ்கூல் பேக்கில் அவசரம் அவசரமாக புத்தகங்களை எடுத்து வைத்து புறப்படுவார்கள் பிள்ளைகள். ஜூன் மாதத்தில் பள்ளி தொடங்கும்போது நீங்கள் வாங்கி தந்த ஸ்கூல் பேக்கை இடைப்பட்ட காலத்தில் செக் பண்ணியிருக்கிறீர்களா? அநேகமாக 'இந்த சைடு ஜிப் வேலை செய்யல' என்று சொல்லும்போதுதான் அதைப் பார்ப்பீர்கள். இது சரியான முறை அல்ல என்கிறார் கண்ணமங்கலம், அரசு ஆண்களின் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை து.விஜயலட்சுமி.

மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய பொருட்களைப் போலவே அவர்களுக்குத் தேவையற்ற பொருட்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் உங்கள் பிள்ளையின் ஸ்கூல் பேக்கில் இருந்துள்ளதா?

புத்தகங்கள்:
ஸ்கூல் பேக்கில் புத்தகங்கள் இருக்கக் கூடாதா எனக் கேட்கிறீர்களா... இருக்கலாம். ஆனால், மற்றவர்களின் புத்தகங்கள் இருக்கக்கூடாது. ஒரு சிலர், ஹோம் வொர்க் செய்வதற்குப் பயந்து, தங்கள் புத்தகங்களை மற்றவர் பைக்குள் வைத்துவிடுவார்கள். அடுத்தநாள், புத்தகம் தொலைந்துவிட்டதாகப் புகார் சொல்வார்கள். அதனால் உங்கள் பிள்ளையின் ஸ்கூல் பேக்கில் அவர்களது புத்தகங்கள் மட்டுமே இருக்கட்டும்.

கூல் டிரிங்ஸ்:
ப்ரஷ் ஜூஸ் குடிப்பதே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. அந்த அடிப்படையிலும் மிகச் சில மாணவர்கள் கூல் டிரிங்ஸில் போதைப் பானங்களை வைத்துச் சாப்பிடும் பழக்கம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவேதான் இந்த எச்சரிக்கை.

பிளேடு:
பென்சில் சீவுவதற்கு எனச் சொன்னாலும் பிளேடு வைத்திருக்க அனுமதிக்காதீர். ஷார்ப்பனரைப் பயன்படுத்தப் பழக்குங்கள். பேக்குக்குள் கையை நுழைத்து ஏதேனும் தேடும்போது, உள்ளேயிருக்கும் பிளேடால் காயம்பட வாய்ப்பிருக்கிறது. இதேபோலத்தான் உடைந்த வளையல்கள், ஆணி, கூரான விளையாட்டுப் பொருட்களுக்கும் தடை போடுங்கள்.

சாக்பீஸ்:
ஆசிரியர் எழுத வைத்திருக்கும் சாக்பீஸ்களை, எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் ஒரு சில மாணவர்களுக்கு இருக்கிறது. இது, ஆசிரியர் மற்றும் வகுப்பு மாணவர்களுக்குத் தெரியவந்தால், உங்கள் பிள்ளையைப் பற்றித் தவறான எண்ணம் தோன்றும்.

ஜாதிக் கயிறு:
சிலரின் தூண்டுதலில் ஜாதிக் கயிறைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் சில மாணவர்களிடையே இருக்கிறது. ஆனால், பள்ளியில் இதை அனுமதிப்பதில்லை. அதனால், அந்தக் கயிற்றை ஸ்கூல் பேக்கில் வைத்திருந்து, பள்ளிக்கு வெளியே கட்டிக்கொள்ள முயலலாம். 'ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்' என்று சொல்லி மறைப்பார்கள். ஆனாலும் அதைத் தடுப்பது அவசியம்.

பாக்கு:
பள்ளியில் ஓரிரு மாணவர்களுக்கு போதை தரும் பாக்குகளைச் சாப்பிடும் வழக்கம் இருக்கலாம். அதைப் பார்த்து ஆர்வமாகி, இவர்கள் வாங்கி வைத்திருக்கலாம். அல்லது பாக்கு சாப்பிடும் மாணவர்களோடு ஏதேனும் சண்டை என்றால், பாக்குக் கவரை உங்கள் பிள்ளையில் ஸ்கூல் பேக்கில் போட்டு, மாட்டிவிட வாய்ப்பும் இருக்கிறது.

விடைத் தாள்:
விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்தாலும் வீட்டில் சிலர் காட்டுவதில்லை. இன்னும் சிலர், தங்கள் விடைத்தாளை வேறு யாராவது ஒரு மாணவரின் ஸ்கூல் பேக்கில் வைத்துவிடுகின்றனர். நீங்கள் சோதித்து, ஒருவேளை வேறு மாணவரின் விடைத்தாள் இருந்தால், ஆசிரியரிடம் கொடுக்கச் சொல்லலாம்.

மெமரி கார்டு:
மாணவர்களிடையே மெமரி கார்டு பரிமாற்றம் சகஜமாக மாறிவிட்டது. அதில் அவர்களுக்குத் தேவையற்ற விஷயங்களும் இருக்கக்கூடும். கவனம்.

செல்போன்:
நாம்தான் செல்போன் வாங்கித் தரவேயில்லையே... பிறகு எப்படி பிள்ளையிடம் இருக்கும் எனும் முடிவுக்கு வந்துவிட வேண்டும். பள்ளி செல்லும் வழியில் கிடந்ததை எடுத்து வைத்திருக்கலாம் அல்லது வகுப்பில் வேறு யாராவது வைத்திருக்கும் செல்போனை இரவலாகப் பெற்று, வைத்திருக்கலாம்.

பணம்:
இது மிகவும் முக்கியமானது. நீங்கள் பாக்கெட் மனி எனத் தரும் பணத்தில், பிள்ளையின் செலவு போக மீதம் வைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதைவிட அதிகமான பணம் இருந்தால், அந்தப் பணம் எப்படிக் கிடைத்திருக்கும் என யோசியுங்கள்.

இவை எல்லாம் உங்கள் பிள்ளையின் போக்கு சரியான திசையில்தான் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காகத்தான். ஒருவேளை மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் ஸ்கூல் பேக்கில் இருந்தால் அவசரப்பட்டு உங்கள் பிள்ளையைத் திட்டி, அடித்துவிடாதீர்கள். அந்தப் பொருளை தானாக வைத்திருக்கிறாரா அல்லது யாரேனும் வைத்தார்களா என விசாரித்து, ஆசிரியரிடம் கலந்து பேசி, சரி படுத்துங்கள். உதாரணமாக போதைப் பாக்கு பாக்கெட்டுகள் வைத்திருந்தால், அதன் பாதிப்புகளை விளக்கி அன்பாக பேசி, அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட செய்யுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

தவறுகள் சின்னதாக இருக்கும்போதே திருத்திவிடுவோம்!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.