Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

#Chironomus ‘ஸ்ரோனமஸ்’...சென்னையின் புதிய தலைவலி!


சென்னையின் அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளுக்கு மாலை 6 மணியளவில் போகத் திட்டமிட்டுருக்கின்றீர்களா? ஒரு நிமிடம்...முகமூடி கொள்ளையர்கள் போல கை,கால்கள், முகமெல்லாம் துணியால் போர்த்திக் கொண்டுதான் நீங்கள் சென்றாக வேண்டும். காரணம்... ஸ்ரோனமஸ் (Chironomus) என்னும் புதிய வகை கொசு. கொசு மாதிரியும் இல்லாமல், ஈசல் மாதிரியும் இல்லாமல் புதுவிதமான ஒரு பூச்சியினக் கொசு வகை இது. இதில் கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பப் பிரிவுகள் உண்டு. 

கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு, தாஜ்மஹால் பச்சை வண்ணத்திற்கு மாறுவதாக பயமும், கூடவே அதற்கான காரணமும் கண்டறியப்பட்டதே ஞாபகம் இருக்கிறதா? தாஜ்மஹாலை பளிங்கு வெள்ளையில் இருந்து பச்சை நிறமாக மாற்றியது, இந்த ஸ்ரோனமஸ் கொசுவின் சித்தப்பா வகை. அதாவது, ஸ்ரோனமஸ் பிரிவிலேயே வருகின்ற ’ஸ்ரோனமஸ் பிளமோசுஸ்’ என்னும் பூச்சியினம்தான் அது.

’யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’ குவிந்த தண்ணீர் மாசுக்களால் பல்கிப் பெருகிய இந்தப் பூச்சியினம், கொஞ்சம் கொஞ்சமாக தாஜ்மஹாலின் மீது ஒட்டி உறவாடி, அதன் ‘பளிச்’ வெண்மையை மங்க வைக்கத் தொடங்கியது.

இந்நிலையில், இந்த ஸ்ரோனமஸ் பூச்சிக் கொசுவின் உறவினக் கொசுக்கள் அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குத் தற்போது குடிபெயர்ந்துள்ளன. மாலை மங்கத் தொடங்கிவிட்டால் போதும், கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கான ஸ்ரோனமஸ் பூச்சிகள் அப்பகுதியை முற்றுகையிடத் தொடங்கிவிடுகின்றன.




இந்தப் பூச்சிவகைக் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கவே கடிக்காது. ‘ஹை...அதான் கடிக்காதே’ என்று மகிழ்ச்சியடையாதீர்கள். இந்த ஸ்ரோனமஸ் கிட்டதட்ட ஒட்டுண்ணி போல உங்கள் வீட்டுக் கொடியில் காயும் துணி, வெள்ளையடித்த சுவர் என்று எல்லா இடங்களில் பசையில்லாமலே ஒட்டிக் கொள்ளும்.

மூக்கிலும், வாயிலும் அமர்ந்து உங்களைப் பாடாய்ப் படுத்தி எடுத்திவிடும். கூடவே, இலவச இணைப்பாக வாந்தி, அலர்ஜி, கண்களில் பிரச்னை ஆகியவற்றை கொடுத்து உங்களை வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் நடையாய் நடக்க வைத்துவிடும். ‘அடிச்சாப் போச்சு’ என்று சாதாரண கொசுவை அடிப்பது போல் மட்டும் அடித்து விடக்கூடாது. டெங்குவெல்லாம் வராது...இது அதுக்கும் மேல..

‘உன் ரத்தம் குடிக்கற சாதா கொசுனு நினைச்சியா? ஸ்ரோனமஸ் கொசுடா’ என்று அதன்பின் உங்கள் கைகளில் தங்கிவிடும் துர்நாற்றம் இரண்டு நாட்களுக்கு உங்களை சோறு சாப்பிட விடாது என்கிறார்கள் அனுபவப்பட்ட அம்பத்தூர்வாசிகள். இதற்கு முக்கியமான காரணம், சென்னையே புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்திற்குப் பின்பு, ஏரிக்கரைகள் சரியாக சுத்தம் செய்யப்படாததே காரணம் என்கிறார்கள் மக்கள். வெளிச்சத்தைக் கண்டாலே ‘குஷி’ பிறந்துவிடுகிறது இந்த கொசுக்களுக்கு. அதனாலேயே, அந்தப் பகுதி முழுவதும் 6 மணிக்கு மேல் முழு இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

மாசுக்கள் நிறைந்த மழை நீர் அல்லது தண்ணீர் குட்டையாகத் தேங்கிக் கிடந்தாலோ, கழிவு நீர் தேங்கிக் கிடந்தாலோ பல்கிப் பெருகும் தன்மையுடைய இந்தக் கொசுப் பூச்சிகள், சென்னை முழுவதும் பரவும் அபாயமும் இருக்கிறது. இந்நிலையில்தான், இதன் லார்வாக்கள், அம்பத்தூர் பகுதியில் எங்கிருக்கிறது என்று அதிகாரிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனராம்!

1 comment:

  1. வரும் மழைகாலதிற்குள் இதுபோன்ற பிரச்சனைகளில் அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீர் செய்யவேண்டும், இல்லாவிட்டால் வரக்கொடிய வெள்ளத்தால் கடந்த ஆண்டைவிட மோசமான விளைவுகள் ஏற்பட்டு பெரும் உயிர்,பொருட்சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது,

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.