Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

கோக் குறித்த ஆவணப்படத்துக்குத் தடை! சென்ஸார் போர்டின் நோக்கம் என்ன?


மத்திய அரசின் திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் குழு விவசாயிகளின் பிரச்சினையை பேசிய ஆவணப்படம் ஒன்றிற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. அதோடு இந்த படம் அரசியல் காரணங்களைப் பேசுவதால் அனுமதி அளிக்க முடியாது என்று விளக்கமும் கொடுத்து இருக்கிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

வெளிநாட்டு குளிர்பான நிறுவனமான கோகொ-கோலா, 2004ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் மெக்திகஞ் என்கிற இடத்தில் இரண்டு ஆலைகளை நிறுவி இருக்கிறது. இதை எதிர்த்து 10 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலத்தடி நீரை அந்த நிறுவனம் உறிஞ்சி வருவதால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை மையமாக வைத்து சமூக செயற்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஜரானா ஜாவேரி ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார்.

‘சார்லியும், கோகோ-கோலா கம்பெனியும்’ என்கிற அந்த ஆவணப்படத்தில், அந்த நிறுவனம் இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது, அதன் தயாரிப்பு முறை எப்படி என்பதோடு, அவர்கள் குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை கலப்பதையும் ஆதார்வம்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார். அதோடு அவர்கள் குளிர்பானத்தை எவ்வாறு சந்தைப்படுத்துகிறார்கள் என்பதையும் விளக்கி இருக்கிறார். தனது ஆவணப்படத்தை தணிக்கைக்கு சமர்பித்து இருக்கிறார்.



அங்கு ஆவணப்படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த படத்திற்கு சான்றிதழ் அளிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதோடு, இந்த ஆவணப்படம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் என்றும், தவறான அரசியல் காரணங்களை கற்பிக்கிறது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து திரைப்பட இயக்குனர் ராகேஷ் சர்மா தனது முகநூல் பக்கத்தில், ‘ தணிக்கைக்குழு வேண்டுமென்றே இந்தப்படத்திற்கு சான்றிதழ் தர மறுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இந்திய திரைப்பட தணிக்கை சட்டப்படி, அரசியல் பேசும் படங்களுக்கு சான்றிதழ் தரக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. அப்படிப் பார்த்தால் எந்த திரைப்படமும் வெளிவரவே முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். அதோடு, குஜராத் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இயக்கிய ஆவணப்படம் தணிக்கை அதிகாரிகளால் எத்தனை விமர்சனத்திற்கு உள்ளானது என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.



கோகோ-கோலா நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடக்கும் கேரளாவின் பிளாச்சிமடா, உத்திரபிரதேசத்தின் ஹாப்பூர், ஆந்திராவின் விசாகப்பட்டினம்,ராஜஸ்தானின் காலா தேரா ஆகிய இடங்களில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் தான் போராட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது) . சமீபத்தில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகப்படியான நீர் எடுப்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் கோகோ-கோலா நிறுவனம் அந்த அறிக்கையை செயல்படுத்துவது என்கிற குற்றச்சாட்டும் அந்த நிறுவனத்தின் மீது இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.