Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

அடையாற்றில் சுவர் எழுப்புவது... பேரழிவா...சமயோசிதமா!?


வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டதாக சென்னை வானிலை மையம் அடிக்கடி தகவல்களை வெளியிடுகிறது. கழிவு நீராகி நாற்றமெடுக்கும் என்னை மீண்டும் புதுப்பிக்க பெரும் மழையே வா! என்று அடையாறு ஆறு அழைக்கத் தொடங்கி விட்டது.
இப்போதைக்கு, சென்ற பெருவெள்ளத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு கழிவு நீர் ஓடையாக ஓடிக்கொண்டிருக்கிறது அடையாறு.

அப்பாவிகள் அகற்றப்பட்டனர்
சென்னையில் ஜாபர்கான்பேட்டை முதல் கோட்டூர்புரம் வரையில் அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். மழை விட்டபிறகு எளிதாகப் பிய்த்துப்போடும் குடிசைகளில் குடியிருந்தவர்கள் அசரால் அப்புறப்படுத்தப் பட்டனர். ஆற்றை ஆக்கிரமித்து இருக்கும் வலுவான காங்கிரீட் கட்டடங்களை அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜாபர்கான் பேட்டை, மேற்கு சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் ஆற்றின் கரையோரம் இருக்கும் கட்டடங்களில் வசிப்பதற்கு மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. கரையோர வீடுகளின் உரிமையாளர்களில் சிலர் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு வெள்ளம் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு நகர்ந்துவிட்டனர். வேறு வழியில்லாத ஒரு சில உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் 2-வது மாடிக்கு நகர்ந்து விட்டனர். தரைதளம், முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.




குறைவான வாடகை
கரையோரம் இருக்கும் வீடுகளின் தரைத்தளங்கள் வழக்கத்தை விடக் குறைவான வாடகைக்குக் கிடைக்கின்றன. மழைக்கு முன்பாக ஒரு பெட்ரூம் கொண்ட குடியிருப்பை 6 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விட்டார்கள். இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழேதான் வாடகைக்குப் போகிறது. கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகளில் தரைத்தளத்தில் குடியிருப்பவர்களில் பலர் வீடுகளைக் காலி செய்து விட்டனர்.
வாடகை குறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும், கொசுக்கடியை பொறுத்துக்கொள்பவர்களும் இப்போது  கரையோர வீடுகளில் குடியிருப்பதற்கு வருகின்றனர்.
அரசின் நிலை என்ன?
அடையாறு ஆற்றில் வெள்ளத்தைத் தாக்குப்பிடிக்கும் வகையில் ஆற்றை தூர்வாரும் திட்டமோ, அகலப்படுத்தும் திட்டமோ இப்போதைக்கு அரசிடம் இல்லை. ஆற்றின் கரையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டங்களும் அரசிடம் இல்லை. சென்னை நகருக்குள் இருக்கும் கரையோர ஆக்கிரமிப்புகள் இப்போது ஏற்பட்டதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அரசு வந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் ஆசியோடு நடந்த ஆக்கிரமிப்புகளில் கைவைத்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்கின்றனர்.




என்னதான் செய்யப்போகிறார்கள்?
ஆக்கிரமிப்பை அகற்றும் திட்டமில்லை என்று அரசு முடிவு செய்தபிறகு, வெள்ளத்தை தடுக்க என்ன செய்வது என்று அடுத்த கட்டமாக ஆலோசனை மேற்கொண்டார்கள். அதன்படி தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர்கான் பேட்டை முதல் கோட்டூர்புரம் வரை அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் காங்கிரீட்டால் ஆன சுவர் எழுப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். திட்டத்துக்கான வரைபடம், இந்த சுவர் எழுப்ப எவ்வளவு செலவாகும், திட்டத்தின் மொத்த மதிப்பீடு எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தயாரித்து தயாரித்து வைத்திருக்கின்றனர். கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு உலக வங்கியில் நிதி கோரவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

சுவர் அமைப்பது நல்லதல்ல


ஆற்றின் கரைகளில் சுவர் எழுப்புவது ஆற்றின் இயற்கையான போக்குக்கு விரோதமான செயல் என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் பேசினோம். "வெள்ளத்தைத் தடுக்க சுவர் கட்டும் பழக்கம் தவறானது. ஆற்றின் போக்கை நாம் தீர்மானிக்க முடியாது. அடையாறு ஆற்றை ஒரு வாய்க்காலாக மாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு ஆற்றுக்கு ஆற்றின் அகலம் என்று ஒன்று இருக்கிறது. இது தவிர ஆற்றில் வெள்ளம் வருவதற்கான பாதை என்று ஒன்று உண்டு. கடந்த 500 ஆண்டுகளில் அல்லது 100 ஆண்டுகளில் அந்த ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்துள்ளது என்று கணக்கிட்டு வைத்திருப்பார்கள். இதுதான் ஆற்றில் வெள்ளம் வருவதற்கான பாதை என்று கூறப்படுகிறது.

ஆனால், இப்போது ஆற்றின் கரைகளில் சுவர் எழுப்பினால், வெள்ளம் வரும் பாதை தடைபடும். சுவர் கட்டிய பின்னர் வெள்ளம் வந்தால் இன்னும் அதிகப் பேரழிவைத்தான் உண்டுபண்ணும். சுவர் கட்டுவது என்பது ஆற்றின் வழியை சுருக்குவதாகத்தான் அர்த்தம். ஆற்றின் அகலத்தை மீட்டெடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஆற்றில் வெள்ளம் வருவதற்கான பாதையையும் மீட்டெடுக்க வேண்டும். இதைத்தான் அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்கு மாறாக சுவர் எழுப்புவது நல்லதல்ல. சூழலுக்குக் கேடு" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.