Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் புகார்



என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இஷ்ரத் ஜகான் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் Lashkar-e-Taiba தீவிரவாதிகள் என்றும் அன்றைய குஜராத் முதல்வரும், இன்றைய இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் போலியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பராமரிப்பிலிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை பாஜக அரசு அமைத்தது. அன்றைய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை உட்பட பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற 11 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போன 5 முக்கிய ஆவணங்களில் ஒரு ஆவணம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, உள்துறை அமைச்சகத்தின் சார்புச் செயலாளர், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆவணங்கள் எப்படி, எத்தகைய சூழலில் காணாமல்போயின என்பதைப் பற்றி விசாரிக்கும்படி அந்தப் புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.