Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 4, 2016

அந்த நாள் ஞாபகம்



பழைய டிவி பெட்டிக்கு குட்- பை!
 .
டிவியில் தெளிவாக படம் தெரிய மொட்டை மாடிக்குப் போய் ஆண்டனாவை சுழற்றி சரிசெய்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். மொட்டை மாடியில் ஆண்டனாவை சரிசெய்பவர் “இப்ப…இப்ப” என்று கத்த கீழே வீட்டுக்குள்ளிருந்து “இன்னும் இல்ல …இப்ப ஓகே.. பழையபடி போச்சு” என பதில் சத்தங்கள் கேட்கும். வெள்ளிக்கிழமை இரவு ரூபவாஹினியில் தமிழ் படம் பார்க்க மதுரையிலிருந்து ஆண்டனாவை சரிசெய்து புள்ளிகளுக்கு நடுவே படம் பார்த்து இரசித்த காலங்களும் உண்டு.
இன்று சாட்டிலைட் சேனல்களும், தட்டைவடிவ HD டிவிகளும் வந்து பொழுதுபோக்கு உலகத்தையே புரட்டிப்போட்டு விட்டன. இந்த நவீன தொழில்நுட்பத்துக்கும் நமது பழைய டிவி தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
வேறொன்றுமில்லை ஒளிபரப்பபடும் மூலத்திலிருந்து சிக்னலைப் பெறும் தன்மையில்தான் அவை மாறுபடுகின்றன.
இன்றைய LED மற்றும் LCD தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னர் நாம் பார்த்துவந்த டிவி பெட்டிக்கு “அனலாக் டிவி (Analog TV)” என்று பெயர், அது காட்சிகளை அனலாக் சிக்னலாக நமக்குத் தந்தது. அனலாக் டிவியை நாம் ஆண்டனா அல்லது கேபிள் இணைப்பு மூலம் பார்க்கிறோம். இதில் ஒரு அலைவரிசையில் ஒரு சேவையை மட்டுமே வழங்கமுடியும். சிக்னலில் குறைபாடுகள் இருப்பின் புள்ளிகளும் அலைகளும் அடித்து காட்சியைக் கெடுத்துவிடும். சிலநேரங்களில் மிக முக்கியமான காட்சிகள் வரும்போது ஒளிபரப்பிலேயே தடங்கல் ஏற்பட்டு “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்ற அட்டையை பலமணிநேரம் காட்டி கடுப்படித்த பெருமை நமது துர்தர்ஷனுக்கு உண்டு. அதெல்லாம் 90-களில் பிறந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் அதைவிட சிறப்பான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு பழைய அனலாக் ஒலிபரப்பு இன்று பல வளர்ந்த நாடுகளில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
டிஜிட்டல் ஒளிபரப்பை நாம் செட்டப் பாக்ஸ் மூலம் பெறுகிறோம். டிஜிட்டல் டிவிகள் கம்ப்யூட்டருக்கு ஒப்பானவை. அனலாக் டிவிக்களைவிட பல மடங்கு தெளிவான காட்சியையும் ஒலியையும் நமக்கு வழங்குகின்றன. டிஜிட்டல் ஒளிபரப்பு முறையில் ஒன்றிற்கு மேற்பட்ட சேவைகளை வழங்க முடியும். ஒலிபரப்பில் சிக்னலில் ஏற்படும் பிரச்சனைகளை அது தானே சரிசெய்து கொள்ளும். அதுமட்டுமல்ல ஸ்டீரியோ, மல்ட்டி-டிராக் (5.1 ஆடியோ), சப்-டைட்டில்கள், பலமொழிகள் (multi-track), நிகழ்ச்சி அட்டவணைகள் அனைத்தையும் டிஜிட்டல் சிக்னலுக்குள் உள்ளடக்கி ஒளிபரப்புவது சாத்தியம். உயர் தர HD (High Definition) ஓலிபரப்பை வழங்குவது டிஜிட்டல் ஒளிபரப்பில் இன்னொரு சிறப்பம்சமாகும்.
அனலாக் டிவியால் டிஜிட்டல் சிக்னலைப் பெற இயலாது. அனலாக் ஒலிபரப்பு முற்றிலும் வழக்கொழிந்து போகவிருக்கும் நிலையில் அனைவரும் அதற்கு குட்பை சொல்லிவிட்டு டிஜிட்டல் டிவிக்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.