Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 11, 2016

காவிரி நீர் பெற்றுத்தரக்கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் கழுத்து வரை உடலை மண்ணில் புதைத்து போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக மாநில அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து பின் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் அங்குள்ள பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைத்து தேசியமயமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் கழுத்து வரை உடலை மண்ணில் புதைத்து நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி காவிரி ஆற்று பாலத்தின் கீழ் பகுதிக்கு வந்தனர். காவிரி ஆற்றில் சிறிய ஓடை போன்ற இடத்தில் மட்டும் தான் தண்ணீர் ஓடுகிறது. மற்ற இடங்களில் மணற்பரப்பாக காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் மண்வெட்டியால் மணலில் குழித்தோண்டி அதில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளும், 3 வயது சிறுமி ஒருவரும் மண்ணில் உடலை புதைத்து தலை மட்டும் வெளியில் தெரியும்படி இருந்தனர்.

விவசாயிகள் கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டும் இருந்தன. அவர்களது பின்னால் சில விவசாயிகள் மண்ணில் அமர்ந்து கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் காலை 11 மணி அளவில் ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் அங்குசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு எழுந்து வர அறிவுறுத்தினர். விவசாயிகள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பெண்கள், ஒரு சிறுமி, 17 ஆண்கள் என மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களை போலீசார் வேனில் ஏற்றி ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் கழுத்து வரை உடலை மணலில் புதைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் தொடர்பாக அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரியில் தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் போதுமானது இல்லை. 120 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்திற்கு மத்திய அரசும் துணைபோகிறது. காவிரி, முல்லைபெரியாறு, சிறுவாணி, பாலாறு விவகாரங்களில் தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகம் பாலைவனமானால் இங்கிருந்து மீத்தேன், கியாஸ் எடுக்க மத்திய அரசின் திட்டம். நதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண நதிகளை தேசியமயமாக்கி இணைக்க வேண்டும்’’ என்றார்.

 2 0 0 2

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.