Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள்! - அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்


தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ''கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை உங்கள் கட்சி மீறியதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்துக்கு அ.தி.முக. சார்பாக கடந்த மே 15–ம் தேதி அளித்த விளக்கத்தில் உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது,

அந்த விளக்கம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டது. அதில், கூட்டுறவு வங்கிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஆதி திராவிடர்களுக்கு இலவச வாஷிங் மெஷின்கள், பொங்கல் நேரத்தில் ரூ.500 இலவச கூப்பன்கள், குடும்ப அட்டை உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவற்றுக்கான சரியான நிதி ஆதாரங்கள் குறித்து உங்கள் கட்சி அளித்த பதில் திருப்தியானதாக இல்லை. எனவே, இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனத்தை தெரிவிக்கிறது. நீங்களும், உங்கள் கட்சியும் வருங்காலத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ''தேர்தல் அறிக்கை குறித்து நீங்கள் அளித்த விளக்கத்தில் வாக்குறுதிகள் மற்றும் அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் பற்றி நியாயப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தாலும், அவை தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக விளக்கப்பட்டு இருக்க வேண்டும். எனவே, உங்கள் கட்சி வருங்காலத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.