Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 19, 2016

அம்மா வை நம்பும் அழகிரி- அப்பாவிடம் சண்டையிடும் ஸ்டாலின் !


தி.மு.க என்றாலே கருணாநிதிதான்,  என்று கடந்த தலைமுறையினர் சொல்லிவந்தனர். ஆனால் இன்றைய இளைய தலைமுறைக்கு தி.மு.க வின் முகமாக மாறிவருகிறார் ஸ்டாலின். கருணாநிதியின்  இடத்திற்கான பயணத்தில் ஸ்டாலின் முன்னேறி வரும் இந்த நேரத்தில்தான் கருணாநிதிக்கு அழகிரியின் ஞாபகம் எட்டிப் பார்க்கிறது என்ற தகவல் கசியத் துவங்கியுள்ளது.

கட்சியின் அடிமட்டத் தொண்டனாக உள்ளே நுழைந்து, படிப்படியாக பதவிகளை பெற்று, இன்று  தி.மு.க வின் பொருளாளர் என்ற நிலையை எட்டியுள்ளார் ஸடாலின். அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம் என்றே சொல்லவேண்டும்.  கட்சியின் சீனியர் தலைவர்களை அனுசரித்து சென்று, தனக்கான செல்வாக்கை படிப்படியாக அதிகரித்து, தன்னை விட சீனியர்களான துரைமுருகன்,ஆற்காடு வீராசாமி, கருணாநிதியை விட மூத்தவரான அன்பழகன், என முன்னணியினர் அனைவரின் ஆதரவோடு தான் கட்சியின் பொருளாளர் பதவிக்கு வந்தார்.

 ஸ்டாலின் கட்சியில் முழு நேர ஊழியராக பங்காற்றி வந்த நேரத்தில், அழகிரி தி.மு.க வின் அடிப்படையைக்  கூட அறிந்திருக்கவில்லை. அவரை என்ன செய்வது என்ற குழப்பம், தகப்பனாக  கருணாநிதிக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. தனக்குப் பின் இந்த கட்சி தனது வாரிசால் தான் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கருணாநிதிக்கு இருந்திருக்கும். ஆனால் அது எந்த வாரிசு என்பதை முடிவு செய்யாமல் கருணாநிதியின் மூளை கணிக்கத் தவறிவிட்டது. சென்னையில் 'ஸ்டாலின் இருக்கட்டும், மதுரையில் அழகிரியை அமர வைப்போம்'  என்று பேரரசின் அரசன் போல , தனது வாரிசுகளை இளவரசர்களாக்கி பார்க்க நினைத்தார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு அழகிரியை அனுப்பி, மதுரை முரசொலி பதிப்பை பொறுப்பேற்று நடத்த சொன்னார். அதோடு,அங்கிருந்த தி.மு.க  முன்னணியினரிடம் தனது மகனுக்கு அரசியல் பாடத்தை கற்றுக் கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் நிலைமை வேறானது, முரசொலிக்கு பொறுப்பேற்கச் சென்றவர்,முரசொலியை மூடும் நிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் மதுரையில் தனக்கான இடத்தை மட்டும் அப்போது ஏற்படுத்தி கொண்டார். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி விவகாரத்திற்க்குள் தலையிடத் துவங்கினார். அழகிரி கட்சிக்குள் வந்ததை ஆரம்பத்தில் கருணாநிதியும் ரசித்தார் என்பதே உண்மை. அப்போது அவருக்கு தெரிந்திருக்காது, இது தான் வருங்காலத்தில் தி.மு.க வின் தேய்மானத்திற்கு காரணமாக போகின்றது என்று.



ஒரு கட்டத்தில் தி.மு.கவின் சக்தியாக ஸ்டாலின் உருவாகி கொண்டிருந்த நேரம், அழகிரிக்கு ஆசையை துாண்டிவிட்டது. 'பத்து வயதானாலே பங்காளி ' என்பார்கள், நாற்பது வயதை கடந்த பிறகு அது வராமல் போகுமா என்ன?. ஸ்டாலினுக்கும்,அழகிரிக்கும் பனிப்போர் துவங்கியது. அதிகார மையமாக யார் இருக்கப்போகிறோம் என்ற கேள்வி இருவருக்கும் இருந்தது. அதை பிடிக்க அழகிரி தேர்ந்தெடுத்த பாதைதான் அவருக்கு சரிவையும் ஏற்படுத்தி விட்டது. ஸ்டாலினோ கச்சிதமாக காய் நகர்த்தி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.  அழகிரி என்றால் அதிரடி என்று பேசப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் தென் மண்டல தி.மு.க வை தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த அழகிரியால், ஆட்சி மாறியதும் அதை தக்கவைக்க முடியாமல், ஒரு கட்டத்தில், கட்சியில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இவர் பின்னால் இருந்த மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பக்கம் சாயத் துவங்கியதும், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அழகிரி, தி.மு.க வை பற்றியே விமர்சிக்க, இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த, ஸ்டாலின் , இதற்கு என்ன செய்ய போகின்றீர்கள்? என்று கட்சித் தலைவர் என்ற முறையில் தனது அப்பாவிடமே கேட்டார்.  கருணாநிதி இரண்டு பேரில் ஒருவரை தான் நாம் முன்னேடுக்க முடியும். அது ஸ்டாலினாக இருந்து விட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்து, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை அன்பழகனை வைத்து அறிவிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதியே “தனக்குப் பின் ஸ்டாலின்தான் என்ற நிலையைப் பகிரங்கமாக அறிவித்தார்; தானே ஸ்டாலினை முன்மொழிவேன் ”என்றார். அதன் பிறகு அழகிரிக்கு அஸ்தமனம் தான். கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கு இழந்து, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கூட பெரிதாக தலைக்காட்டாமல் இருந்தார். சட்டமன்ற  தேர்தலில் மீண்டும் கட்சிக்குள் அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அழகிரியிடம் ஏற்பட்டது. ஆனால் அதை ஸ்டாலின் குடும்பத்தினர் முழுமையாக தடுத்துவிட்டனர். இவர் வந்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என்ற பகிரங்கமாகவே ஸ்டாலின் தரப்பில் இருந்து கருணாநிதிக்கு செய்திகள் போனது.

தேர்தல் முடியும் வரை அமைதியாக அவனை இருக்கச் சொல்லு என்று செல்வி மூலம் கருணாநிதி, அழகிரிக்கு சொல்லி அனுப்பினார். தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தது. தனக்கான வாய்ப்பு மீண்டும் உள்ளது என்ற நம்பிக்கை அவருக்குள் பிறந்தது. சகோதரி செல்வி மூலம் மீண்டும் கட்சியில் இணைவதற்கு துாது அனுப்பினார். அன்பழகனையும் அவர் வீட்டில் சென்று சந்தித்தாக கூறப்படுகிறது. அப்போது கொஞ்சம் இறங்கி வந்த ஸ்டாலின் “ கட்சியில் சேர்த்துக் கொள்வோம், ஆனால் எந்த பொறுப்பும் கேட்க கூடாது” என்று சொல்லுங்கள் என்றார்.

அழகரியும் காத்திருந்தார், ஆனால் அறிவிப்பு மட்டும் வந்தபாடில்லை. நொந்து போன அழகிரி  இப்போது கிரிக்கெட்  மேட்ச் பார்த்து பொழுது போக்கி வருகிறார். தனது வீட்டிற்கு வருபவர்களிடம் “ எனக்கு எப்போது எல்லாம் சிக்கல் வருகிறதோ, அப்பொது எனக்கு ஆதரவாக இருந்தது எனது அம்மா (தயாளு) தான். ஆனால் இப்போது அவர் ஞாபகமறதி நோயால் இருக்கிறார். அவரால் பேசவும் முடியவில்லை. அவர் நல்லா இருந்தால், எனக்கு இந்த நிலை வந்திருக்க விட்டிருக்க மாட்டார். அப்பாவின் நிலையும் சரியில்லை. செல்வி மட்டும் தான் எனக்காக இப்போது பேசி வருகிறார். அப்பாவும், அம்மாவும் இருக்கும் போதே எனக்கு எதுவும் செய்யமுடியாவிட்டால், பிறகு எனக்கு கட்சியில் எதிர்காலமே, இல்லை.அப்பாவிடம் செல்வி பேசிவருகிறார். நம்பிக்கையோடு இருக்கிறேன்“ என்கிறாராம்.



அதே நேரம் ஸ்டாலின் “ அவரை கட்சிக்குள் சேர்க்கவே வேண்டாம். வந்தால் ஏதாவது வம்பு பண்ணிக் கொண்டே இருப்பார் ”என்று கொஞ்சம் கடுமையாகவே கருணாநிதியிடம் சொல்லியுள்ளார். செல்வி மட்டும் தான் கருணாநிதியிடம் “ நீங்கள் இருக்கும் போதே இதற்கு ஒரு முடிவு செய்துவிடுங்கள். அண்ணனை கட்சியில் இணைத்துவிடுங்கள்”என்று சொல்லியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக கட்சியில் இருந்து ஓரம் கட்டபட்டு, அஸ்தமனத்தில் இருக்கும் அழகிரி, அப்பாவின் முடிவிற்காக காத்துள்ளார்.

அழகிரியின் என்ட்ரிக்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.