Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்த முதல் இந்தியப் பெண்


இந்திய விடுதலைக்குப் பிறகு, துறைதோறும் பெண்கள் செய்துவரும் சாதனைகள் மிகப் பெரியது. அப்படி சாதித்தவர்களின் முதல் தொடக்கமாக விளங்குபவர், ஆரத்தி சாஹா. இவர்,மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர் 24ல் பிறந்தார். சிறுவயது முதல் நீச்சல் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆறு, குளத்தைக் கண்டால் அதில் இறங்கிக் குளிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை வருவதுபோல, அப்படிப் பார்க்கும் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கணும் என்கிற ஆசை ஆரத்தி சாஹாவுக்கு வரும். அப்பா, ராணுவ வீரர். சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். நான்கு வயதில், தன் மாமாவுடன் 'சம்பதாளா கேட்' என்ற இடத்தில் குளிக்கப் போனபோது நீச்சல் கற்றுக்கொண்டார். அன்று தொடங்கிய நீச்சல் பயிற்சிதான், 1959 செப்டம்பர் 29ல் உலக சாதனையானது.



இங்கிலீஷ் கால்வாய் என்றால், தெற்கு இங்கிலாந்துக்கும் வடக்கு ஃப்ரான்ஸுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலோடு இணையும் குட்டிக் கடல். இது, 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. அகலமும் கொண்டது. கடுங் குளிரும் சுறா மீன்களும் ஜெல்லி மீன்களும் அலையும் அபாயகரமான நீர்ப்பரப்பு. இதில், மிகவும் தைரியமாக நீந்தி ' Mount Everest of Swimming' என்ற  சொல்லும் அளவுக்கு இவரது சாதனை பேசப்படுகிறது. அப்போது இவருக்கு வயது 18. சச்சின் நாக் என்பவரிடம் பயிற்சிபெற்ற ஆரத்தி, 1945-க்கும் 1951-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 22 மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.

100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 200 மீட்டர் ப்ரீஸ்ட் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டிகளில் வென்று தேசிய சாதனை புரிந்தார். அடுத்து 1952-ல் நடைபெற்ற சம்மர் ஒலிம்பிக்கில்  200 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டோக்கில் போட்டிக்குத் தேர்வானார்.

ஃப்ரான்ஸின் கேப் க்ரிஸ் நெஸ்ஸிலிருந்து சேண்ட்கேட் வரை நீந்தி, 16 மணி 20 நிமிடங்களில் 42 மைல் (67 கிலோமீட்டர்) தூரத்தைக் கடந்தார். சேண்ட்கேட்டில் நமது இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, தன் வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினார். ஆரத்தியின் இந்தச் சாதனைக்காக 1960ல் இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்திய தபால்துறை  இவருக்கு சிறப்புத் தபால்தலை வெளியிட்டு மகிழ்ந்தது.

இது, இந்திய மற்றும் ஆசிய இளம் நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளித்தது. தனக்கு முன்பு சாதனை நிகழ்த்திய ஆண் நீச்சல் வீரர் 'மிஹிர் சென்' னையே தனது ரோல்மாடலாகக்கொண்டு சாதை புரிந்தார், ஆரத்தி. 1994 ஆகஸ்ட் 23ல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதுவரை 1,341 வீரர், வீராங்கனைகள் இந்தக் கால்வாயைக் கடந்திருந்தபோதும், முதன் முதல் என்ற பெருமையைத் தேடித் தந்த இந்தியப் பெண் ஆரத்தி சாஹாவுக்கு இன்று சல்யூட் அடித்து பெருமை கொள்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.