Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம்: பணிந்தது ஏர் சைனா!


லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என 'ஏர்சைனா' விமானத்தின் 'விங்ஸ் ஆஃப் சைனா'  செப்டம்பர் மாத பதிப்பில்  இடம் பெற்றுள்ள விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'' பொதுவாக லண்டன் பாதுகாப்பான நகரம்தான். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.  இந்த இடங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம் என அந்த விளம்பரம் கூறுகிறது. 'அத்துடன் பயணிகள் இரவில் இந்த பகுதியில் தனியாகப் போகக் கூடாது. பெண்கள் துணையுடன் மட்டும்தான் போக வேண்டும்' என்றும் அந்த விளம்பரம் அறிவுறுத்துகிறது.

ஏர் சைனாவில் பயணிக்கும் பயணிகளுக்கு 'டிராவல் டிப்ஸ்' என்ற பெயரில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளரான ஹசே ஃபன் என்பவர் அந்த விளம்பரத்தை  புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லண்டன் மேயர் சாதிக்கான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதால், லண்டன் மேயரின் கவனத்துக்கு என்றும் ட்விட் செய்திருந்தார். இதையடுத்து அந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விளம்பரத்தை பார்த்து  லண்டன் வாழ் இந்தியர்கள் கொந்தளித்துள்ளனர்.



கடந்த 1960ம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வரும் இந்தியரும் எம்.பியுமான வீரேந்திர சர்மா, சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து சீன அரசிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '' இந்த விளம்பரத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையில்லாத விஷயங்களை இனவெறியுடன் அந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. உடனடியாக பிரிட்டனுக்கான சீன தூதரின் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு சென்றேன்.

ஏர் சைனா நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். விளம்பரம் இடம் பெற்றுள்ள பத்திரிகைகளை பயணிகளுக்கு விநியோகிக்கக் கூடாது என எச்சரித்துள்ளேன். ஆனால், இதுவரை எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. முறையான பதில் வரவில்லை என்றால், பிரிட்டனுக்கு விமானத்தை இயக்கும் தகுதி ஏர் சைனாவுக்கு இல்லை எனும் அளவிற்கு விவகாரத்தை தீவிரமாக்குவேன்'' என்றார்.

சீன விமான நிறுவனத்தின் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தற்போது அந்த புத்தகங்கள் அனைத்தையும் வாபஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' இனரீதியான தாக்குதல்கள் எந்த ரீதியில் நடந்தாலும் அதனை சீன அரசு உறுதியாக எதிர்க்கும். அனைவரும் சமம் என்பதில் உறுதி  கொண்டுள்ளோம். விளம்பரம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏர்சைனா நிறுவனம் இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாளும் '' என தெரிவித்துள்ளார்.



 சீன நிறுவனங்கள் இனரீதியான  விளம்பரங்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், வாஷிங் பவுடர் விளம்பரம் ஒன்றில், சீன பெண் ஒருவர் கருப்பின இளைஞர் ஒருவரை வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைப்பது போலவும் அந்த இளைஞர் நன்றாக வாஷ் செய்யப்பட்டு  சீன இளைஞர் போல மாறி வெளியே வருவது போலவும் விளம்பரம் ஒன்று வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. விளம்பர உலகல் இனவெறியுடன் வெளியிடப்பட்ட மிக மோசமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. இந்த விளம்பரத்துக்கு கடும் எதிப்பு கிளம்பியதையடுத்து, அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.