Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 20, 2016

உரி பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ரஷியா பாக். உடனான ராணுவ பயிற்சியை ரத்து செய்தது


உரி பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள ரஷியா, பாகிஸ்தான் உடனான ராணுவ பயிற்சியை ரத்து செய்தது. இது இராஜதந்திர ரீதியில் அனைத்து மட்டத்திலும் பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம் உரியில் நேற்று ராணுவ முகாமுக்குள் தற்கொலை படை பயங்கரவாதிகள் புகுந்து தாக்கியதில் 18 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் மீது சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆயுதங்களும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. எனவே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை மத்திய அரசு குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

காஷ்மீர் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.  இந்த கூட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களில், பிரதமர் மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது, உரியில் நடந்த தாக்குதல் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் அவர் கருத்து பரிமாற்றம் நடத்தி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஒவ்வொரு சர்வதேச கூட்டமைப்பில் இருந்தும் பாகிஸ்தானை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது. சர்வதேச அமைப்புகள் ஆதாரம் தேவை என்று கோரினால், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வழங்குவதற்கு இந்தியா முன்வந்து உள்ளது. உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவியின் தரவுகள் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தனர் என்பதை காட்டுகிறது.

பாகிஸ்தான் ராணுவ சின்னங்கள் பதிக்கப்பட்ட ஆயுதங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். இருநாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகின.

முதல் வெற்றி

இந்நிலையில் உரி பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள ரஷியா, பாகிஸ்தான் உடனான ராணுவ பயிற்சியை ரத்து செய்தது. இது இராஜதந்திர ரீதியில் அனைத்து மட்டத்திலும் பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டு இறுதியில் ரஷ்யா -பாகிஸ்தான் ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளனர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்தியா கவலைக் கொள்ள தேவையில்லை என்றும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உரி பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு எங்களுடைய இரங்கலை தெரிவிக்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் என்று ரஷியா கூறிஉள்ளது. பயங்கரவாத தாக்குதலை கிரிமினல் நடவடிக்கை என்று குறிப்பிட்டு உள்ள ரஷியா, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை முன்னெடுக்க இந்தியாவிற்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்பதை உறுதிசெய்கிறோம் என்று ரஷியா குறிப்பிட்டு உள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் உடனான ராணுவ பயிற்சியை ரஷியா ரத்து செய்தது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.