Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 16, 2016

‘காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்’ மண்டியாவில் காலி குடங்களுடன் தமிழர்கள் போராட்டம்


மண்டியாவில், கர்நாடகத்துக்கு ஆதரவாக நேற்று தமிழர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அவர்கள் காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கடந்த 12-ந் தேதி வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். தமிழக பதிவு எண் கொண்ட பஸ்கள், லாரிகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

இதேப்போல் மண்டியா மாவட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக அங்கு கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணா பகுதிகளில் கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான கன்னட அமைப்பினர் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டை வீசி கலைத்தனர்.

தமிழர்கள் போராட்டம்

தொடர்ந்து பதற்றம் நிலவியதால் மண்டியா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கே.ஆர்.எஸ். அணையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் மண்டியாவில் போராட்டம் நீடித்தது. மண்டியாவில் உள்ள தமிழர்கள் நேற்று கர்நாடகத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா டவுன் பகுதியில் காலி குடங்களுடன் திரண்ட தமிழர்கள் தமிழகத்திற்கு எதிராகவும், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்

மேலும் அவர்கள், “கன்னடர்களும், கர்நாடகத்தில் உள்ள தமிழ் மக்களும் ஒன்றாகத் தான் வாழ்ந்து வருகிறோம். சகோதரத்துடன் பழகி வருகிறோம். ஆனால் தமிழ்நாடு ராமேசு வரத்தில் கன்னடர் ஒருவர் மீது தமிழக மக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் உள்ள கர்நாடக சங்கங்கள், கன்னடர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றை அங்குள்ள தமிழக மக்கள் தாக்கி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் உள்ள அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லை. குறிப்பாக காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீர் இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்கும் அளவில் மட்டுமே உள்ளது. அதை வைத்து விவசாயம் செய்ய இயலாது. ஆனால் தமிழ்நாட்டில் விவசாயம் செய்வதற்காக காவிரியில் தண்ணீர் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டு பெற்றுள்ளார்.

ஏற்கனவே வறட்சியினால் மண்டியாவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கக் கூடாது. காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்” என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் தலையிட வேண்டும்

இதுகுறித்து போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ் மக்கள் நல அமைப்பின் தலைவர் பெருமாள் கூறுகையில், காவிரி பிரச்சினை கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் தீராத பகையை உருவாக்கி வருகிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.