Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

’திரும்பி செல்லுங்கள், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ அனைத்துக்கட்சி குழுவினரை சந்திக்க மறுத்த பிரிவினைவாதிகள்


’திரும்பி செல்லுங்கள், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்று அனைத்துக் கட்சி குழுவினரிடம் கூறிய பிரிவினைவாத தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர்.

காஷ்மீரில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரிவினைவாதிகளுடன் பேசுவதற்காக நியமிக்கப்பட்டு இருந்த 6 பேரும், அவர்கள் சிறைவைக்கப்பட்டு இருந்த இடங்களுக்கு சென்று சந்திக்க முயன்றனர். அதன்படி சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சரத் யாதவ், நாராயணன் ஆகிய 4 எம்.பி.க்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹுரியத் தலைவர் ஜிலானியின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வெளியே நின்றிருந்த சிலர் இந்த எம்.பி.க் களுக்கு எதிராக கோஷமிட்டனர். ஜன்னல் வழியாக இதை பார்த்துக்கொண்டு இருந்த ஜிலானியும், எம்.பி.க்களை சந்திக்க மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினார். ஜிலானியின் வீட்டின் வெளியே சுவரில் “திரும்பி செல்லுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அனைத்து கட்சி குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஜிலானியின் வீட்டின் கதவை பலமுறை தட்டியும் பலன் அளிக்கவில்லை. ஜிலானி கதவை திறக்க மறுத்துவிட்டார். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் பிரிவினைவாத ஆதரவாளர்கள் “திரும்பி செல்லுங்கள், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்,” என்ற கோஷங்களை எழுப்பினர்.

சீதாராம் யெச்சூரி பேசுகையில், “நாங்கள் இங்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தோம், ஜிலானி தரப்பு தகவலை கேட்க வந்தோம். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. நாம் பேச்சுவார்த்தையின் மூலமே அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும்,” என்றார்.

ஹுமாமா எல்லைப்பாதுகாப்பு படை முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள யாசீன் மாலிக்கை அவர்கள் சந்திக்க சென்ற போதும் இதே நிலைதான் காணப்பட்டது. அவரும் எம்.பி.க்கள் குழுவை திருப்பி அனுப்பியதுடன், தான் டெல்லி வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக தெரிவித்தார்.

இதைப்போல ஹுரியத் மாநாட்டு முன்னாள் தலைவரான அப்துல் கனிபட்டும் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. எனினும் அவர்களை வரவேற்ற அவர், இந்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது என்று கூறிவிட்டார்.

இதற்கிடையே மற்றொரு பிரிவினைவாத தலைவரான மிர்வைஸ் உமர்பரூக் அடைக்கப்பட்டுள்ள சஸ்மா சாகி சிறைக்கு, அசாதுத்தீன் ஒவைசி தனியாக சென்றார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த உமர்பரூக், காஷ்மீர் பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. ஒவைசியை தொடர்ந்து யெச்சூரி உள்ளிட்ட 4 எம்.பி.க்களும் உமர்பரூக்கை சந்திக்க முயன்றனர். ஆனால் 25 நிமிடம் காத்திருந்தும் அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

முன்னதாக அனைத்துக்கட்சி குழுவினருடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு மெகபூபா விடுத்த அழைப்பையும் பிரிவினைவாதிகள் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.