Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 17, 2016

சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான வாலிபர்


’பிச்சை புகினும் கற்கை நன்றே..’ என்ற பழமொழி நமது முன்னோர்கள் சொல்லிவைத்த வெறும்மொழி அல்ல அது மதிப்பிற்குரிய ’பொன்மொழி’ என்பதை ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயவேல் நிரூபித்துள்ளார்.

சென்னை:

ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கிய கடும் வறட்சியால் சென்னையை நோக்கி பிழைக்கவந்த பல விவசாயக் குடும்பங்களில் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயவேலின் குடும்பமும் ஒன்றாகும்.

ஆனால், சென்னையில் உடனடியாக வேலை கிடைக்காத சூழலில் நகரின் முக்கிய சாலைகளில் பெற்றோருடன் சேர்ந்து பிச்சை எடுத்து, வாழ்க்கையை ஓட்டிவந்த ஜெயவேலின் ‘பிச்சை வருமானம்’ போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட அவரது தாயாரின் ‘டாஸ்மாக்’ செலவுக்குகூட போதுமானதாக இல்லை.



இந்நிலையில், சாலையோரவாசிகளின் வாழ்க்கை அவலத்தை ’நடைப்பாதை பூக்கள்’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரிக்க விரும்பிய உமா - முத்துராமன் தம்பதியரின் பார்வையில்பட்ட ஜெயவேலின் வாழ்க்கையில் வசந்தம் துளிர்க்க தொடங்கியது.

இதைப்போன்ற ’ஆதரவற்றவர்களுக்கு உதவுகிறோம்’ என்ற போர்வையில் இவர்களை அணுகும் பலரும், அரசிடம் இருந்து உதவிகளை பெறுவதற்காக தொண்டு நிறுவங்களை நடத்திவரும் நிலையில் உண்மையாகவே நடைபாதைவாசிகளுக்கு உதவிட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் உமா-முத்துராமன் தம்பதியரின் அரிய முயற்சியால் இயங்கிவரும் ‘சுயம் அறக்கட்டளை’ கடந்த 1999-ம் ஆண்டு ஜெயவேலை தத்தெடுத்து, அவரை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது,

பள்ளிக்கு அருகாமையில் உள்ள நடைபாதையில் வசித்துவந்த ஜெயவேலைப் பற்றி அவருடன் படிக்கும் இதர மாணவர்களுக்கு தெரிந்திருந்ததைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஜெயவேல், உமா-முத்துராமன் தம்பதியரின் ஆதரவு மற்றும் ஊக்கத்தால் மிகநன்றாக படித்து 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து, அவரது மேல்படிப்புக்கு நிதியுதவி செய்ய சிலர் முன்வந்தனர். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற ஜெயவேல், வேல்ஸ் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் கார்களின் செயல்திறனை மேம்படுத்துவது (Performance Car Enhancement Technology Engineering) தொடர்பான பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

அதன் அடுத்த நிலையான பட்டயப் படிப்புக்காக இத்தாலி நாட்டில் உள்ள டுரின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துவரும் ஜெயவேலின் கல்வி செலவினங்களுகாக உமா-முத்துராமன் தம்பதியர் இதுவரை சுமார் 25 லட்சம் ரூபாய்வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக ஜெயவேல் கூறுகிறார்.

படித்துமுடித்து, தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பியதும், நல்ல வேலையில் சேர்ந்து, சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்த என்னை கல்வியறிவு பெற்ற முழு மனிதனாக மாற்றிய உமா-முத்துராமன் தம்பதியரின் கடனை திருப்பி செலுத்துவதுடன், என்னால் இயன்ற நன்றிக்கடனை அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் ஜெயவேலுக்கு ஒரு ‘ஓ’ போடலாம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.